கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கோலோச்சும் முனைப்பில் கொல்கத்தா + "||" + IPL: Kolkata on the initiative of Colossus

ஐ.பி.எல். கிரிக்கெட்: கோலோச்சும் முனைப்பில் கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட்: கோலோச்சும் முனைப்பில் கொல்கத்தா
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
இதில் பங்கேற்க ஆயத்தமாகி வரும் 8 அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலம், பலவீனம் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் கவுதம் கம்பீர் தலைமையில் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களுடன் களம் இறங்கிய போதிலும் இறுதி சுற்றை கூட எட்ட முடியவில்லை. கம்பீரின் வெளியேற்றத்துக்கு பிறகு கொல்கத்தாவின் கம்பீரமும் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டது.கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணி 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 5-வது இடத்தை பிடித்து மயிரிழையில் ‘பிளே-ஆப்’ வாய்ப்பை கோட்டை விட்டது. முதல் 7 ஆட்டங்களில் கேப்டனாக இருந்த தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதன் பிறகு பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக கூறி கேப்டன் பதவியை துறந்தார். எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்தை சேர்ந்த 
அதிரடி பேட்ஸ்மேன் இயான் மோர்கன் கேப்டனாக பணியாற்றினார். குறுகிய வடிவிலான போட்டிகளில் அனுபவம் வாய்ந்த மோர்கன் இந்த சீசனில் முழுநேர கேப்டனாக செயல்பட உள்ளார். கொல்கத்தா நிர்வாகம், அணியில் பெரிய அளவில் மாற்றமின்றி 5 வீரர்களை மட்டும் கழற்றி விட்டு 17 வீரர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

சென்ற சீசனில் கொல்கத்தாவின் செயல்பாட்டை உற்றுநோக்கினால், தொடக்க வரிசை, மிடில் வரிசை, வெற்றிகரமாக நிறைவு செய்வது என்று எதிலும் நிலையான ஆட்டம் இன்றி தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த சுப்மான் கில் மொத்தம் 440 ரன்கள் குவித்தார். ஆனால் அவருக்கு சாியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. சுனில் நரின், டாம் பான்டன், ராகுல் திரிபாதி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக அவருடன் இணைந்து விளையாடியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜொலிக்கவில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 84 ரன்னில் முடங்கி சந்தித்த மோசமான சாதனையும் கடந்த சீசனில் அடக்கம்.அந்த அணி இறுதிகட்டத்தில் எப்போதும் நம்பி இருப்பது ஆந்த்ரே ரஸ்செல் என்ற அதிரடி புயலைத் தான். சில ஓவர்கள் மட்டுமே களத்தில் நின்றாலும் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றக்கூடிய அசாத்திய ஆற்றல் படைத்தவர். ஆனால் கடந்த ஆண்டு அவரும் (10 ஆட்டத்தில் 117 ரன்) சொதப்பினார். இதே போல் 
மிடில் வரிசையில் ஆடும் தினேஷ் கார்த்திக் 14 ஆட்டத்தில் 169 ரன் மட்டுமே எடுத்தார். திறமையான பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள அந்த அணி மீண்டும் கோலோச்ச வேண்டும் என்றால் தீவிரமாகவும், ஒருங்கிணைந்தும் செயல்பட வேண்டியது அவசியம்.பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் பேட் கம்மின்ஸ், லோக்கி பெர்குசன், சமீபத்தில் சர்வதேச போட்டியில் அறிமுகமான இந்திய 
வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, நாகர் கோட்டி, ஷிவம் மாவி என்று தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமில்லை.

சுழற்பந்து வீச்சு துறைக்கு ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், மூத்த வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு 17 விக்கெட் வீழ்த்தி அசத்திய வருண் சக்ரவர்த்தி மற்றும் அனுபவ சுழல் குல்தீப் யாதவ் ஆகியோரும் உள்ளனர்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர்களுக்கு தேர்வாகியும் காயத்தால் விளையாட முடியாமல் போன தமிழகத்தை சேர்ந்த வருண்சக்ரவர்த்தி ஐ.பி.எல்.-ல் எந்த அளவுக்கு உடல்தகுதியுடன் இருப்பார் என்பதை பார்க்க வேண்டியுள்ளது. மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினின் பந்துவீச்சு 
அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறது. கடந்த ஆண்டு அவரது பந்து வீச்சின் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து 4 ஆட்டங்களில் ஓரங்கட்டப்பட்டார். அதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீசில் நடந்த கரிபீயன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டிலும் இதே பிரச்சினையில் சிக்கினார். மட்டையை வேகமாக சுழட்டக்கூடிய சுனில் நரின் பவுலிங்கிலும் முத்திரை பதித்தால் தான் எழுச்சி பெற முடியும்.

கொல்கத்தாவின் முதல் 3 லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கின்றன. சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. அதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பை அந்த அணி நிர்வாகம் அதிகம் எதிர்பார்க்கிறது. கொல்கத்தா அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 11-ந்தேதி ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

இதுவரை...

2008- லீக் சுற்று

2009- லீக் சுற்று

2010- லீக் சுற்று

2011- பிளே-ஆப் சுற்று

2012- சாம்பியன்

2013- லீக் சுற்று

2014- சாம்பியன்

2015- லீக் சுற்று

2016- பிளே-ஆப் சுற்று

2017- பிளே-ஆப் சுற்று

2018- பிளே-ஆப் சுற்று

2019- லீக் சுற்று

2020- லீக் சுற்று

அணி வீரர்கள்
இயான் மோர்கன் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், தினேஷ் கார்த்திக், கம்லேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லோக்கி பெர்குசன், நிதிஷ் ராணா, கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திரிபாதி, சந்தீப் வாரியர், ரிங்கு சிங், ஷிவம் மாவி, சுப்மான் கில், சுனில் நரின், டிம் செய்பெர்ட், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் ஆரோரா, கருண் நாயர், ஹர்பஜன்சிங், பென் கட்டிங், வெங்கடேஷ் அய்யர், பவான் நெகி

தலைமை பயிற்சியாளர் :பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி; பெங்களூரு அணி வெளியேற்றம்
ஐ.பி.எல். தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்கு
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
4. ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
5. கொல்கத்தாவில் கனமழை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்
கொல்கத்தாவில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.