ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மீண்டும் அதிர வைக்குமா ஐதராபாத்?


டேவிட் வார்னர்
x
டேவிட் வார்னர்
தினத்தந்தி 4 April 2021 12:07 AM GMT (Updated: 4 April 2021 12:07 AM GMT)

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் ஐதராபாத் சன்ரைசர்சும் ஒன்று. 2016-ம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் அந்த அணி சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது. இந்த சீசனிலும் டாப்-4 அணிகளில் ஒன்றாக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.ஐதராபாத் அணி கடந்த ஆண்டு கடைசி கட்டத்தில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. அப்போது கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக 
வெற்றி பெற்று, ரன்ரேட்டிலும் முன்னிலை கண்டு பிளே-ஆப் வாய்ப்பை (7 வெற்றி, 7 தோல்வி) தட்டிச் சென்றது. அதன் பிறகு இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி அணியிடம் 17 ரன் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஐதராபாத் வலிமைமிக்க அணியாக தென்படுகிறது. பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் ஐ.பி.எல்.-ல் மொத்தம் 4 சதத்துடன் 5,254 ரன்கள் எடுத்தவரான டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், ஜாசன் ராய், ஜாசன் ஹோல்டர், விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே என்று நட்சத்திர பட்டாளத்துக்கு பஞ்சமில்லை. வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அபாயகரமான தொடக்க ஜோடியாக வர்ணிக்கப்படுகிறது. இவர்கள் ஜோடியாக திரட்டிய 185 ரன்களே (2019-ம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக) ஐ.பி.எல்.-ல் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக நீடிக்கிறது. அண்மையில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் பேர்ஸ்டோ 94, 124 ரன்கள் நொறுக்கியது ஐதராபாத் அணிக்கு உற்சாகமூட்டும். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், நடராஜன், உலகின் 2-ம் நிலை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது, சித்தார்த் கவுல் என்று தரமான பவுலர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடந்த சீசனில் தான் தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் யார்க்கர் மன்னனாக உருவெடுத்தார். 16 விக்கெட் வீழ்த்தியதுடன், தொடர் முழுவதும் 71 பந்துகளை யார்க்கராக வீசி மிரட்டினார். வேறு யாரும் இவ்வளவு யார்க்கர்களை துல்லியமாக வீசியதில்லை. அதன் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டுக்குள் கால்பதித்து இன்று நம்பிக்கை அளிக்கும் ஒரு பவுலராக முன்னேறியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இறுதி ஓவரில் அட்டகாசமாக யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியை தேடித்தந்தார். இந்த ஆண்டும் அவர் முத்திரை பதிப்பார் என்று நம்பலாம்.இதே போல் காயத்தில் இருந்து மீண்டு வந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கட்டுக்கோப்புடன் பந்து வீசி 6 விக்கெட் கைப்பற்றியதுடன் ஓவருக்கு சராசரியாக 4.65 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றிக்கு துணை நின்ற புவனேஷ்வர்குமார், ஐதராபாத் அணியில் தொடக்ககட்ட பந்து வீச்சு தாக்குதலை தொடுக்க தயாராகி வருகிறார். ரஷித்கான் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பார். அந்த அணிக்குரிய முதல் 5 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கின்றன. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளம் ரஷித்கானுக்கு அனுகூலமாக இருக்கும்.

ஐதராபாத் அணிக்கு தலைவலியான ஒரு பிரச்சினை என்னவென்றால் இதில் அங்கம் வகிக்கும் 8 வெளிநாட்டு வீரர்களும் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் களம் காண முடியும் என்பதால் வில்லியம்சன், ஜாசன் ராய், ஹோல்டர் ஆகியோரை சுழற்சி முறையில் தான் பயன்படுத்த முடியும். அவ்வாறான சூழலில் மிடில் வரிசையில் மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், விருத்திமான் சஹா, பிரியம் கார்க் ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக நம்பியிருக்க வேண்டி உள்ளது. இவர்கள் தடுமாறும் போது, அணி பெரிய ஸ்கோரை எட்டுவதில் சிக்கலாகி விடும்.இதே போல் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பொறுப்பு இந்த முறை ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், ஏலத்தில் புதிதாக வாங்கப்பட்டுள்ள கேதர் ஜாதவ் ஆகியோருக்கு செல்கிறது. பின்வரிசையில் இவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அந்த அணியின் ‘பிளே-ஆப்’ வீறுநடையை தடுப்பது கடினம்.ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 11-ந் தேதி கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.

இதுவரை...
2013- பிளே-ஆப் சுற்று

2014- லீக் சுற்று

2015- லீக் சுற்று

2016- சாம்பியன்

2017- பிளே-ஆப் சுற்று

2018- 2-வது இடம்

2019- பிளே-ஆப் சுற்று

2020- பிளே-ஆப் சுற்று

அணி வீரர்கள்
டேவிட் வார்னர் (கேப்டன்), அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, பாசில் தம்பி, புவனேஷ்வர்குமார், ஜாசன் ஹோல்டர், ஜானி பேர்ஸ்டோ, வில்லியம்சன், மனிஷ் பாண்டே, முகமது நபி, பிரியம் கார்க், ரஷித்கான், சந்தீப் ஷர்மா, ஷபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, டி.நடராஜன், விஜய் சங்கர், விராட் சிங், விருத்திமான் சஹா, ஜெ.சுசித், கேதர் ஜாதவ், முஜீப் ரகுமான், ஜாசன் ராய்.

தலைமை பயிற்சியாளர்: டிரேவர் பெய்லிஸ் (ஆஸ்திரேலியா)

Next Story