கோலி, ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொள்கிறேன்: ‘நான் அதிரடி வீரர் கிடையாது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் புஜாரா பேட்டி


கோலி, ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொள்கிறேன்: ‘நான் அதிரடி வீரர் கிடையாது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் புஜாரா பேட்டி
x
தினத்தந்தி 4 April 2021 6:45 PM GMT (Updated: 4 April 2021 4:40 PM GMT)

‘நான் அதிரடி வீரர் கிடையாது’ கோலி, ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொள்கிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் புஜாரா பேட்டியளித்தார்.

மும்பை,

இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழும் 33 வயதான புஜாரா மீது டெஸ்ட் வீரர் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டதால் அவரை எந்த ஐ.பி.எல். அணிகளும் விரும்புவதில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் அவரை ரூ.50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. இதன் மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் கால்பதிக்கும் புஜாரா இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஸ்டிரைக்ரேட் என்று வரும் போது நான் பந்தை வலுவாக அடித்து நொறுக்கும் வீரர் கிடையாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். 

அதே சமயம் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களிடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். ரோகித் சர்மாவை எடுத்துக் கொண்டால், அவர் முழுக்க முழுக்க பந்தை வலுவாக விளாசும் வீரர் கிடையாது. ஆனால் குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் பந்தை சரியாக கணித்து விரட்டுவதில் கில்லாடியாக திகழ்கிறார். இதே போல் கேன் வில்லியம்சன், ஸ்டீவன் சுமித் ஆகியோரிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். இவர்கள் கிரிக்கெட்டில் வழக்கமான ஷாட்டுகள் மூலமே நிறைய ரன்கள் திரட்டுகிறார்கள். 

ஆனால் புதுமையான ஷாட்டுகளையும் அடிப்பார்கள். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் வெற்றிகரமான வீரராக வலம் வர வேண்டும் என்றால் வித்தியாசமான ஷாட்டுகளை அடிப்பதும் அவசியம். ஆரம்பத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறேன். எப்போதுமே நமக்குரிய இயல்பான ஆட்டமும், பலமும் ஒரு போதும் நம்மை விட்டு போகாது என்பதை உணர்ந்துள்ளேன். 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி முடித்ததும், அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றபடியும் என்னை மாற்றிக்கொள்ள முடியும்’ என்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கலக்கிய ஹனுமா விஹாரியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது குறித்து வருத்தப்பட்ட புஜாரா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விஹாரி அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Next Story