கோப்பை ஏக்கத்தை தணிக்குமா பெங்களூரு?


கோப்பை ஏக்கத்தை தணிக்குமா பெங்களூரு?
x
தினத்தந்தி 4 April 2021 7:15 PM GMT (Updated: 4 April 2021 5:17 PM GMT)

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் கோப்பையை வெல்லாத ஒரே அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான். ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்களுடன் படையெடுப்பதும், பிறகு நெருக்கடியை சாதுர்யமாக சமாளிக்க இயலாமல் கோட்டைவிடுவதும் தொடர்கதையாகிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் தொடக்கத்தில் பெங்களூரு அணியின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. முதல் 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்று திக்குமுக்காடி பிளே-ஆப் சுற்றை எட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது. 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 4-வது இடத்தை பிடித்த பெங்களூரு அணி அதன் பிறகு வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சிடம் பணிந்து நடையை கட்டியது. இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் (473 ரன்) கேப்டன் விராட் கோலி (466 ரன்), டிவில்லியர்ஸ் (454 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பு தான் அந்த அணி லீக் சுற்றை தாண்ட உதவியது.

இந்த ஆண்டு போட்டிக்குரிய அணியில் அதிரடி மாற்றங்களை செய்துள்ள அந்த அணி நிர்வாகம் ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், மொயீன் அலி உள்பட 10 வீரர்களை கழற்றி விட்டு, சில புதிய வீரர்களை மெகா தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரும், அதிரடி பேட்மேனுமான கிளைன் மேக்ஸ்வெல்லை எடுக்க சென்னை அணி மல்லுகட்டிய போதிலும் கடைசி வரை போராடி ரூ.14¼ கோடிக்கு அவரை பெங்களூரு அணி இழுத்துக் கொண்டது. இதே போல் உயரமான வீரரான நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கைல் ஜாமிசனை ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்களின் வருகை பெங்களூரு அணியின் மிடில் வரிசையையும், பந்து வீச்சையும் வலுப்படுத்தும் என்று அந்த அணி உறுதியாக நம்புகிறது.

ஆரோன் பிஞ்ச் விடுவிக்கப்பட்டு விட்டதால் இந்த சீசனில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கப்போவதாக கேப்டன் கோலி ஏற்கனவே தெரிவித்து விட்டார். ஆனால் இப்போது திடீரென தேவ்தத் படிக்கல் கொரோனாவில் சிக்கி இருப்பதால் முதல் ஓரிரு ஆட்டங்களில் கோலியுடன் தொடக்க வீரராக ஆடப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பந்து வீச்சில் பெங்களூரு அணியின் பலம் இந்த முறை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய முகமது சிராஜ், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஜாமிசன், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா என்று திறமையான பவுலர்கள் உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கடந்த சீசனில் ஓவருக்கு சராசரியாக 5.96 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தனது சிக்கனத்தை காட்டினார். இந்த ஆண்டு முதல் 3 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடப்பதால் உள்ளூர் வீரரான வாஷிங்டன் சுந்தர் கூடுதல் உற்சாகத்துடன் வலம் வருவார்.

பெங்களூரு அணியின் பலவீனமே பேட்டிங்கில் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரை அதிகமாக சார்ந்து இருப்பது தான். இவர்கள் சரியாக ஆடாத சமயத்தில், மற்றவர்கள் அணியை தூக்கி நிறுத்தும் வகையில் ஆட வேண்டியது முக்கியமாகும்.

ஐ.பி.எல். உதயமானதில் இருந்து பெங்களூரு அணியில் இடம் பெற்று வரும் விராட் கோலி நீண்ட காலமாக கேப்டனாகவும் பணியாற்றி வருகிறார். இந்த தடவையாவது கோப்பை ஏக்கத்தை தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த சீசனிலும் சொதப்பல் தொடர்ந்தால் அவரது கேப்டன் பதவிக்கு கூட ஆபத்து வரலாம்.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் 9-ந்தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.

அணி வீரர்கள்

விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஆடம் ஜம்பா, தேவ்தத் படிக்கல், கேன் ரிச்சர்ட்சன், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, பவன் தேஷ்பாண்டே, ஷபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், டேனியல் சாம்ப்ஸ், ஹர்ஷல் பட்டேல், மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் படிதர், முகமது அசாருத்தீன், கைல் ஜாமிசன், டேன் கிறிஸ்டியன், சுயாஷ் பிரபுதேசாய், கே.எஸ்.பரத், பின் ஆலென்.

தலைமை பயிற்சியாளர்: சைமன் கேடிச் (ஆஸ்திரேலியா)

Next Story