உச்சம் தொடுமா டெல்லி அணி?


உச்சம் தொடுமா டெல்லி அணி?
x
தினத்தந்தி 5 April 2021 11:21 PM GMT (Updated: 5 April 2021 11:21 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் அதிக தோல்வியை சந்தித்த (105 தோல்வி) அணி என்ற மோசமான பொதியை சுமந்து கொண்டு இருக்கும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ். 4 முறை ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்துள்ள அந்த அணி கடந்த ஆண்டு முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் பற்றிய கண்ணோட்டம் வருமாறு:-

ஐ.பி.எல். போட்டியில் அதிக தோல்வியை சந்தித்த (105 தோல்வி) அணி என்ற மோசமான பொதியை சுமந்து கொண்டு இருக்கும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ். 4 முறை ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்துள்ள அந்த அணி கடந்த ஆண்டு முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

கடந்த சீசனில் முதல் 9 லீக் ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று முன்னிலை வகித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி அடுத்த 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி தடுமாறியது. கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. எல்லா அணிகளையும் பந்தாடி பரவசப்படுத்திய டெல்லி அணி, முரட்டு காளையாக வலம் வரும் மும்பையிடம் இறுதிப்போட்டி உள்பட மல்லுக்கட்டிய நான்கு ஆட்டங்களிலும் சரணடைந்ததுடன் கோப்பையையும் கோட்டை விட்டது.

டெல்லி அணியின் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (2 சதம், 4 அரைசதம் உள்பட 618 ரன்கள்), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 அரைசதம் உள்பட 519 ரன்கள்) ஆகியோர் அசத்தினார்கள். ஆனால் அந்த அணியின் தொடக்க ஜோடி நிலையாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பிரித்வி ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், ரஹானே ஆகியோரை மாற்றி, மாற்றி ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களம் இறக்கியும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. நிலையற்ற தொடக்க ஆட்டமும், பேட்டிங்கில் ஒரு சேர ‘கிளிக்’ ஆகாததும் சற்று பின்னடைவாக அமைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் ஆல்-ரவுண்டராக ஜொலித்தது போல் அக்‌ஷர் பட்டேல் பிரகாசிக்கவில்லை. அக்‌ஷர் பட்டேலின் பந்து வீச்சு போல் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. தற்போது அக்‌ஷர் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் முதல் கட்ட ஆட்டங்களில் ஆட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை அள்ளிய அக்‌ஷர் பட்டேலின் சுழல் இந்த முறை அதிகம் கவனிக்கப்படும்.

வேகப்பந்து வீச்சு டெல்லி அணிக்கு பிரம்மாஸ்திரமாக இருக்கிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்க பவுலர்களான காஜிசோ ரபடா (30 விக்கெட்), அன்ரிச் நோர்டியா (22 விக்கெட்) ஆகியோர் தங்களது அதிவேக பந்து வீச்சின் மூலம் எதிரணியினரை மிரட்டியதுடன், விக்கெட் அறுவடையிலும் முறையே முதலாவது, 4-வது இடத்தை பிடித்து அணியின் வெற்றிக்கும் முதுகெலும்பாக விளங்கினர்.

கடந்த முறை சரியாக செயல்படாத மொகித் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே, அலெக்ஸ் கேரி உள்பட 5 வீரர்களை கழற்றி விட்ட டெல்லி அணி, டாம் கர்ரன் (ரூ.5¼ கோடி), ஸ்டீவன் சுமித் (ரூ.2.20 கோடி) உள்பட 8 வீரர்களை கடந்த பிப்ரவரியில் நடந்த ஏலத்தின் மூலம் சொந்தமாக்கி தனது வலிமையை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தரையில் விழுந்து பந்தை தடுக்க முயலுகையில் இடது தோள்பட்டை இறங்கியதால் இந்த தொடர் முழுவதும் ஆடாமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 23 வயது இளம் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் பெரிய அளவில் சோபிக்காத ரிஷாப் பண்ட், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் அதிரடியில் கலக்கினார். இதே மாதிரி கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் ஆடி வெறும் 228 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்த பிரித்வி ஷா முந்தைய மாதம் நடந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஒரு இரட்டை சதம், 2 சதம் உள்பட 827 ரன்கள் குவித்து சாதனை படைத்து பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். இது அந்த அணியின் பேட்டிங்கை வலுவாக்கும். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாததால் ஏற்பட்டுள்ள பெரும் வெற்றிடத்தை எப்படி நிரப்ப போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். கடந்த முறை ஜொலிக்காத ரஹானே, ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். வேகப்பந்து வீச்சு புயல்கள் காஜிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டியில் விளையாடி விட்டு இந்தியா புறப்பட்டுள்ளனர். கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருப்பதால் அவர்கள் தொடக்க லீக் ஆட்டத்தில் விளையாட முடியாது.

ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பின் மூலம் இன்னும் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்பட பலரும் ஆரூடம் சொல்லி உள்ளனர். அதிக அனுபவம் இல்லாத ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பை திறம்பட கையாண்டு புதிய சரித்திரம் படைப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க நீண்ட காலமாக போராடி வரும் டெல்லி இந்த முறையாவது உச்சம் தொடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி சென்னை சூப்பர் கிங்சை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. 

Next Story