கிரிக்கெட்

பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிப்பு + "||" + RCB's Daniel Sams tests positive for COVID-19

பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிப்பு

பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டிக்கான ஆயத்த பணிகள் ஒரு பக்கம் பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடந்து வந்தாலும், வீரர்கள் மற்றும் போட்டியுடன் தொடர்புடையவர்கள் கொரோனா தாக்குதலுக்குள்ளாவது தொடர் கதையாகிறது.

தேவ்தத் படிக்கல் இணைந்தார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல், மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகர் கிரண்மோரே ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்ட நிதிஷ் ராணா பயிற்சியை தொடங்கி விட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருந்த தேவ்தத் படிக்கலுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய கொரோனா தடுப்பு விதிமுறையின்படி மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினருடன் நேற்று இணைந்தார்.

20 வயது இடக்கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் கடந்த ஐ.பி.எல். போட்டியில் 15 ஆட்டங்களில் ஆடி மொத்தம் 473 ரன்கள் குவித்து இருந்தார். இந்த சீசனில் நடந்த முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் அவர் 218 ரன்னும், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 737 ரன்னும் எடுத்து நல்ல பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டேனியல் சாம்ஸ் பாதிப்பு

தேவ்தத் படிக்கல் அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயது ஆல்-ரவுண்டரான டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்தது.

இது குறித்து பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கடந்த 3-ந் தேதி கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவுடன் சென்னையில் உள்ள அணியின் ஓட்டலுக்கு வந்த டேனியல் சாம்ஸ்க்கு நடத்தப்பட்ட 2-வது கட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அறிகுறி இல்லாமல் தொற்றுக்குள்ளாகி இருக்கும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் அணியின் மருத்துவ குழுவினர் டேனியல் சாம்ஸ்சின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொரோனா தடுப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.