கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? + "||" + IPL Cricket match: Will Chennai Super Kings rise?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கி மே 30-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:-

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய (8 முறை) அணி என்ற சிறப்புக்குரிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் 3 முறை மகுடம் சூடியிருக்கிறது. வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாக கடந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சிக்குள்ளானது. முந்தைய அனைத்து தொடர்களிலும் குறைந்தது ‘ளே-ஆப்’ சுற்றை எட்டியிருந்த சென்னை அணிக்கு கடந்த ஆண்டு போட்டி தான் மிக மோசமான அனுபவத்தை தந்தது. கொரோனா அச்சத்தால் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் விலகியது, 

இரண்டு வீரர்கள் உள்பட 13 உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு, சரியான தொடக்கம் கிடைக்காதது, மிடில் வரிசையில் கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங், கேப்டன் டோனியின் தடுமாற்றம் (14 ஆட்டத்தில் 200 ரன்), ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ முழு உடல்தகுதியுடன் இல்லாதது இவை எல்லாம் சென்னை அணியின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. கடந்த ஆண்டு போட்டியை எடுத்துக் கொண்டால் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது மட்டுமே தித்திப்பு. அதன் பிறகு எல்லாமே சறுக்கல் தான். முதல் 11 ஆட்டங்களில் 8-ல் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அதன் பிறகு கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை அணி 7-வது இடத்தை (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக இறங்கி கடைசி கட்டத்தில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் விளாசியது ஆறுதலான விஷயமாகும். பாப் டு பிளிஸ்சிஸ் (449 ரன்), அம்பத்தி ராயுடு (359 ரன்) ஆகியோரும் கணிசமான ரன்கள் சேகரித்தனர்.

படுதோல்வி எதிரொலியாக இந்த ஆண்டுக்குரிய போட்டிக்கான சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் (கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்) ஹர்பஜன்சிங், முரளிவிஜய் உள்பட 6 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தனிப்பட்ட காரணத்துக்காக இந்த சீசனில் இருந்து பின்வாங்கி விட்டார். மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரி நிஷாந்த் உள்ளிட்டோர் ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்டுள்ளனர். பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணியில் 
இருந்து வாங்கப்பட்டார்.

அத்துடன் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லையும் எப்படியாவது ஏலத்தில் எடுத்து விட வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ரூ.14 கோடி வரை மல்லுகட்டி பார்த்தனர். ஆனால் கடைசியில் பெங்களூரு அணி அவரை இழுத்துக் கொண்டது.சுரேஷ் ரெய்னா மீண்டும் வருகை, விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவில் இருந்து குணமடைந்துள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முகாமில் இணைந்தது, அதிரடி ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், மொயீன் அலி, உத்தப்பா ஆகிய புதிய வரவுகள் இவை எல்லாம் இந்த சீசனில் சென்னை அணியின் வலிமையை அதிகரித்துள்ளது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 39 வயதான டோனியால் மீண்டும் அதிரடி ஜாலம் காட்ட முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் அணியை பழைய நிலைக்கு எழுச்சி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவர் வீரர்களை ஒருங்கிணைத்து திட்டம் வகுத்து வருகிறார்.

பொதுவாக சென்னை அணியின் பலம் என்பது அனுபவ வீரர்கள் தான். ஆனால் கடந்த சீசனில் அதீத அனுபவமே பலவீனமாகி விட்டது. மூத்த வீரர்கள் காயத்தில் சிக்கியதும், அவுட் ஆப் பார்மும் பாதிப்பு ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அனுபவமும், இளமையும் கலந்த அணியாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சென்னை அணி வீரர்களின் சராசரி வயது 30.08 என்பது கவனிக்கத்தக்கது.சென்னை அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாக உள்ளூர் மைதானமான சேப்பாக்கம் இருந்தது. இங்கு தான் அதிக வெற்றிகளை குவிப்பார்கள். ஆனால் இந்த முறை சொந்த ஊரில் ஒரு ஆட்டங்கள் கூட இல்லாததால் வியூக அமைப்பிலும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது.

சூதாட்ட பிரச்சினையால் இரண்டு ஆண்டு தடை நடவடிக்கைக்குள்ளான சென்னை அணி மறுபிரவேசம் செய்த 2018-ம் ஆண்டில் சாம்பியன் கிரீடத்தை கையில் ஏந்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதே போல் கடந்த ஆண்டு சந்தித்த சரிவில் இருந்து வெகுண்டெழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

இதுவரை...
2008- 2-வது இடம்

2009- பிளே-ஆப் சுற்று

2010- சாம்பியன்

2011- சாம்பியன்

2012- 2-வது இடம்

2013- 2-வது இடம்

2014- பிளே-ஆப் சுற்று

2015- 2-வது இடம்

2018- சாம்பியன்

2019- 2-வது இடம்

2020- லீக் சுற்று

அணி வீரர்கள்
டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, கே.எம்.ஆசிப், வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், பாப் டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர், ஜெகதீசன், கரண் ஷர்மா, நிகிடி, மிட்செல் சான்ட்னெர், சாய் கிஷோர், ரவீந்திர ஜடேஜா, உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, ஹரி நிஷாந்த், பகத் வர்மா.

தலைமை பயிற்சியாளர்: ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து).


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.