அரைமணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் தொடங்குவது முதலில் பந்து வீசும் அணிக்கே சாதகம் - சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்


அரைமணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் தொடங்குவது முதலில் பந்து வீசும் அணிக்கே சாதகம் - சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்
x
தினத்தந்தி 12 April 2021 1:15 AM GMT (Updated: 12 April 2021 1:15 AM GMT)

இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டிகள் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது முதலில் பந்து வீசும் அணிக்கே சாதகமாக இருக்கும் என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.

மும்பை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை பதம் பார்த்தது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி, சுரேஷ் ரெய்னாவின் (54 ரன்) அரைசதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை டெல்லி அணி 18.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷாவும் (72 ரன்), ஷிகர் தவானும் (85 ரன்) அற்புதமான தொடக்கம் தந்து வெற்றியை சுலபமாக்கி விட்டனர்.

தோல்விக்கு பனிப்பொழிவின் தாக்கத்தையும், அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவதையும் ஒரு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி குறிப்பிட்டுள்ளார்.

பனிப்பொழிவு அதிகமாகி ஈரப்பதமாக இருக்கும் போது பவுலர்கள் பந்தை சரியாக பிடித்து துல்லியமாக வீச முடியாமல் தடுமாறுவார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுத்து விடுவார்கள். இதை சுட்டிகாட்டி டோனி கூறியதாவது:-

முதலில் பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவை மனதில் வைத்துத் தான் விளையாடுகிறோம். முன்பு இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது. இப்போது இரவு 7.30 மணிக்கே தொடங்கி விடுகிறது. குறைந்தது முதல் அரைமணி நேரம் பனிப்பொழிவின் தாக்கம் மிக மிக குறைவு. அந்த சமயத்தில் ஆடுகளம் சற்றே வறண்டு இருக்கும். பேட்டிங் செய்வதற்கு சிரமம். இது முதலில் பந்து வீசும் அணிக்கு சாதகமான அம்சமாகும்.

இந்த ஆட்டத்தில் நிலைமை அப்படி தான் இருந்தது. சீரான பனிப்பொழிவுக்கு ஏறக்குறைய 45-50 நிமிடங்கள் ஆகி விட்டது. அதன் பிறகே பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. ஆனாலும் எங்களது பேட்ஸ்மேன்கள் தொடக்க கட்ட சரிவை சமாளித்து தங்கள் பணியை சிறப்பாக செய்து 188 ரன்கள் குவித்தனர். தொடர்ச்சியாக பனியின் தாக்கம் இருக்கும் பட்சத்தில் இது போன்ற ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்யும் அணி நிச்சயம் 200 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆடுவார்கள். ஆனால் நான் ஏற்கனவே சொன்னது மாதிரி முதல் அரைமணி நேரம் தான் வித்தியாசத்தை ஏற்படுத்தப்போகிறது. அதனால் முதலில் பேட் செய்யும் போது 15-20 ரன்கள் கூடுதலாக எடுப்பது மட்டுமின்றி, எதிரணியின் தொடக்க விக்கெட்டுகளையும் சீக்கிரம் வீழ்த்த வேண்டியது அவசியமாகும்.

எங்களது பந்து வீச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசியிருக்கலாம். பவுலர்களின் திட்டமிடல் மிகவும் மோசமாக இருந்தது. எளிதில் பவுண்டரிக்கு விரட்டும் வகையில் சில பந்துகளை வீசி விட்டனர். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வரும் ஆட்டங்களில் நன்றாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு டோனி கூறினார்.

டெல்லி புதிய கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘கேப்டனாக முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு எதிராக அதுவும் டாஸ் போடுவதற்கு டோனியுடன் களத்திற்கு சென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். அவர் தான் எனது குரு. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று இருக்கிறேன்.

மிடில் ஓவர்களில் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஆனால் அவேஷ்கானும், டாம் கர்ரனும் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசி அவர்களை 188 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் பவர்-பிளேயில் அருமையாக ஆடினர். ஒரு ஓவர் மிச்சம் வைத்து ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் ரன்ரேட் குறித்து சிந்திக்கவில்லை’ என்றார்.

Next Story