‘நிலைமைக்கு தகுந்தபடி பேட்ஸ்மேன்கள் ஆடாததால் தோல்வி’- வார்னர்


‘நிலைமைக்கு தகுந்தபடி பேட்ஸ்மேன்கள் ஆடாததால் தோல்வி’- வார்னர்
x
தினத்தந்தி 16 April 2021 1:10 AM GMT (Updated: 16 April 2021 1:10 AM GMT)

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இதில் பெங்களூரு நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி ஒரு கட்டத்தில் 1 விக்கெட்டுக்கு 96 ரன்களுடன் வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் கேப்டன் டேவிட் வார்னர் (54 ரன்) வெளியேறியதும் விக்கெட்டுகளை மளமளவென இழந்து 9 விக்கெட்டுக்கு 143 ரன்னில் அடங்கிப்போனது.

தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறுகையில், ‘இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. மிடில் ஓவர்களில் இருந்து நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது. இடக்கை சுழற்பந்து வீச்சை மடக்கி அடித்து ஆடுகையில் நினைத்த மாதிரி பந்து செல்லவில்லை. நிலைமையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி நிதானமாக எங்களது பேட்ஸ்மேன்கள் ஆடாதது பாதிப்பை ஏற்படுத்தியது. நிலைத்து நின்று ஆடிய இரு பேட்ஸ்மேன்களில் ஒருவர் கடைசி வரை களத்தில் நின்றிருக்க வேண்டும். அதை செய்ய தவறி விட்டோம். இந்த மைதானத்தில் இன்னும் எங்களுக்கு 3 ஆட்டங்கள் இருக்கிறது. இங்கு எப்படி ஆடுவது என்பதை அறிந்து அதற்கு தகுந்தபடி நாங்கள் செயல்பட வேண்டியது அவசியமாகும்.’ என்றார்.

Next Story