சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத்?


சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத்?
x
தினத்தந்தி 17 April 2021 2:28 AM GMT (Updated: 17 April 2021 2:28 AM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது.

தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் கடைசி பந்தில் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. அதுவும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலையில் கடைசி கட்ட அபார பந்து வீச்சால் மும்பை பவுலர்கள் மடக்கி காட்டினர். சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு உதவினார். சென்னையில் நிலவும் சீதோஷ்ண நிலை, மெதுவான ஆடுகளத்தன்மை ஆகியவற்றை சமாளித்து அதிரடியாக ரன் எடுப்பது சிரமம் என்பதை உணர்ந்துள்ள மும்பை வீரர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். அனேகமாக இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் ஜெயந்த் யாதவ் அல்லது பியுஷ் சாவ்லா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கூடுதலாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ஐதராபாத் சன்ரைசர்சை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூருவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்களுடன் ஐதராபாத் வெற்றிப்பாதையில் பயணித்தது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் முற்றிலும் நிலைகுலைந்து 6 ரன்னில் தோற்று போனது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஐதராபாத் கேப்டன் வார்னர், சரிவில் இருந்து மீள்வதற்கு பவர்-பிளேயில் ஆதிக்கம் செலுத்துவதும், பேட்டிங்கில் வலுவான பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவசியம் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார். பலம் வாய்ந்த மும்பையின் சவாலை தகர்த்து ஐதராபாத் அணி வெற்றிக்கணக்கை தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஐதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. ஒரு வாரத்திற்குள் முழு உடல்தகுதியை எட்டிவிடுவேன் என்று வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்தார்.
(நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story