20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ‘விசா’ - மத்திய அரசு உறுதி


20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ‘விசா’ - மத்திய அரசு உறுதி
x
தினத்தந்தி 18 April 2021 1:27 AM GMT (Updated: 18 April 2021 1:27 AM GMT)

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ‘விசா’ வழங்க மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ‘விசா’ வழங்குவதில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை இந்தியா தர வேண்டும், இல்லாவிட்டால் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றும்படி சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவதில் உள்ள சிக்கல் தீர்ந்துள்ளது. அந்த அணி வீரர்களுக்கு ‘விசா’ வழங்க மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசும் போது கூறியுள்ளார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், தர்மசாலா, லக்னோ, ஆமதாபாத் ஆகிய 9 நகரங்களில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த தகவலை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் ஒருவர், ‘பாகிஸ்தான் அணிக்குரிய விசா பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் அந்த நாட்டு ரசிகர்கள் இந்தியாவுக்கு வந்து போட்டியை நேரில் பார்க்க முடியுமா? என்பது தெளிவாக தெரியவில்லை. அது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்’ என்றார்.

பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் காரணமாக 2012-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் எந்தவிதமான நேரடி கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story