ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது வெற்றி
x
தினத்தந்தி 18 April 2021 1:53 AM GMT (Updated: 18 April 2021 1:53 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது வெற்றியை ருசித்தது.

சென்னை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது. மும்பை அணியில் மார்கோ ஜேன்சனுக்கு பதிலாக ஆடம் மில்னே சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் 4 மாற்றமாக டி.நடராஜன், விருத்திமான் சஹா, ஜாசன் ஹோல்டர், ஷபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு விராட் சிங், அபிஷேக் ஷர்மா, முஜீப் ரகுமான், கலீல் அகமது இடம் பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அவரும், குயின்டான் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்து பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கினர். முஜீப் ரகுமான், புவனேஷ்வர்குமாரின் ஓவர்களில் சிக்சர்களை ஓடவிட்ட ரோகித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை உருவாக்கினார். இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன் திரட்டினர். இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் விஜய் சங்கர் பிரித்தார். அவர் வீசிய பந்தை ரோகித் சர்மா (32 ரன், 25 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்து கேட்ச் ஆனார். அவரது அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவும் (10 ரன்) சிக்கினார்.

இதன் பிறகு மும்பையின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. 10 முதல் 16-வது ஓவர் வரை பந்து ஒரு தடவை மட்டுமே எல்லைக்கோட்டை தொட்டது. குயின்டான் டி காக் 40 ரன்னிலும் (39 பந்து, 5 பவுண்டரி), களம் கண்டது முதலே தடுமாறிய இஷான் கிஷன் 12 ரன்னிலும் (21 பந்து) நடையை கட்டினர்.

கடினமான இந்த ஆடுகளத்தில் கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ஆறுதல் அளித்தார். சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானின் பந்துவீச்சில் விளாசிய ஒரு சிக்சர் 105 மீட்டர் தூரத்துக்கு பறந்தது. இந்த சீசனில் மெகா சிக்சர் இது தான். இதே போல் புவனேஷ்வர்குமாரின் ஓவரில் கடைசி இரு பந்தையும் சிக்சராக்கி 150 ரன் என்ற சவாலான ஸ்கோரை அடைவதற்கு வழிவகுத்தார். இதற்கிடையே ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னில் வீழ்ந்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. பொல்லார்ட் 35 ரன்களுடனும் (22 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), குருணல் பாண்ட்யா 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் விஜய் சங்கர், முஜீப் ரகுமான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 151 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத்தின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களம் புகுந்தனர். அதிரடி காட்டிய பேர்ஸ்டோ, வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். ஆடம் மில்னேவின் பந்து வீச்சில் 2 சிக்சர் தெறிக்க விட்டார். இதனால் பவர்-பிளேயில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்து திடமான நிலையில் காணப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக பேர்ஸ்டோ (43 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஸ்டம்பை மிதித்து ‘ஹிட் விக்கெட்’ ஆகிப்போனார். இதே போல் வார்னர் (36 ரன், 34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தேவையில்லாமல் ஓடி ரன்-அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மும்பை பக்கம் திரும்பியது. மிடில் வரிசையில் விஜய் சங்கர் (28 ரன், 25 பந்து, 2 சிக்சர்) சற்று போராடிப் பார்த்தார். 19.4 ஓவர்களில் அந்த அணி 137 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஐதராபாத்துக்கு விழுந்த 3-வது அடியாகும்.

Next Story