மும்பை அணிக்கு எதிராக நடராஜன் ஏன் களமிறக்கப்படவில்லை - வி.வி.எஸ் லட்சுமண் விளக்கம்


மும்பை அணிக்கு எதிராக நடராஜன் ஏன் களமிறக்கப்படவில்லை - வி.வி.எஸ் லட்சுமண் விளக்கம்
x
தினத்தந்தி 18 April 2021 9:27 AM GMT (Updated: 18 April 2021 9:27 AM GMT)

மும்பை அணிக்கு எதிராக நடராஜன் ஏன் களமிறக்கப்படவில்லை என்பது குறித்து சன் சைர்ஸ் அணியின் ஆலோசகர் வி.வி.எஸ் லட்சுமண் விளக்கமளித்துள்ளார்.

சென்னை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது. அதில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் இருவரைத் தவிர வேறு எந்த வீரரும் சரியாக விளையாடவில்லை. 

இதனிடையே நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் சைர்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன் களமிறங்காதது குறித்து அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமண் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது, இங்கு பேட்ஸ்மேனை நோக்கி பந்து மெதுவாகத்தான் வரும். களத்துக்கு வந்தவுடனே பவுண்டரி, சிக்சரையும் அடிக்க பேட்ஸ்மேன்கள் நினைக்கக்கூடாது. இந்த ஆடுகளத்தில் முடிந்தவரை பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நகர்த்த வேண்டும். இதுபோன்ற ஆடுகளத்தில் இப்படித்தான் விளையாட வேண்டும். முடிந்தவரை எதிரணியினருக்கு டாட் பந்துகளை விட்டுக்கொடுக்காமல் ஒரு ரன்னாவது எடுத்து பந்தை வீணாக்காமல் விளையாடவேண்டும். ஆனால், இதுபோன்ற ஆட்டத்தை இந்த ஆடுகளத்தில் சன்ரைசர்ஸ் அணி விளையாடவில்லை.

குறிப்பாக ராகுல் சஹர் பந்துவீசும்போது, நடுப்பகுதியில் வேகப்பந்துவீச்சாளர் பந்துவீசும் போது, இதுபோன்று ஒரு ரன், 2 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனவுடன் நின்று அதன்பின் பேட்ஸ்மேனை நோக்கி வருகிறது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதலாக டர்ன் ஆகிறது, சற்று பவுன்ஸும் ஆகிறது. இதுபோன்ற விஷயங்களை நிச்சயம் விவாதிக்க வேண்டும். இதுபோன்ற ஆடுகளத்தில் புதிதாக களமிறங்கும் ஒரு பேட்ஸ்மேன் உடனடியாக ஆடுவது கடினம், அதனால் ஏற்கெனவே களத்தில் இருக்கும் செட்டில் ஆன பேட்ஸ்மேன்தான் ஆட்டத்தை முடிக்க விளையாட வேண்டும். முதல் 10 ஓவர்கள் சன்ரைசர் அணியின் பக்கம்தான் ஆட்டம் இருந்தது. ஆனால் 2-வது பாதியில் ஆட்டம் திசை திரும்பியது. 

இந்த ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் களமிறங்கவில்லை. அவரின் இடதுகாலில் லேசான வீக்கம் இருந்தது, இதனால், தொடர்ந்து அவர் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கலீல் அகமது களமிறக்கப்பட்டார். நடராஜன் காலில் ஏற்பட்ட வீக்கம் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து வருகிறோம். சன்ரைசர்ஸ் மருத்துவ ஆலோசகர்கள் சரியான முடிவை எடுப்பார்கள். அது அவருக்கும், உரிமையாளருக்கும் பயனளிக்கும்” என்று விவிஎஸ் லட்சுமண் கூறினார்.

Next Story