கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 2-வது வெற்றி ராஜஸ்தானை சாய்த்தது + "||" + IPL Cricket: Chennai beat Rajasthan by 2 wickets

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 2-வது வெற்றி ராஜஸ்தானை சாய்த்தது

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 2-வது வெற்றி ராஜஸ்தானை சாய்த்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பதிவு செய்தது.
மும்பை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மல்லுகட்டின. இரு அணிகளும் மாற்றமின்றி களம் கண்டன. ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் சென்னையை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை ஆரம்பித்த சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பெரிய அளவில் ரன்திரட்ட வேண்டும் என்று நோக்குடன் அதிரடியாக மட்டையை சுழட்டினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த வீரரும் நீண்ட நேரம் நிலை கொண்டு விளையாடவில்லை. ருதுராஜ் 10 ரன்னில் வெளியேறினார். ஜெய்தேவ் உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி தூள் கிளப்பிய பிளிஸ்சிஸ் 33 ரன்களில் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். மொயீன் அலி (26 ரன், ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ் ரெய்னா (18 ரன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), அம்பத்தி ராயுடு (27 ரன், 3 சிக்சர்) ஆகியோரும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

சென்னை 188 ரன்

கேப்டன் டோனியின் தடுமாற்றம் இந்த ஆட்டத்திலும் எதிரொலித்தது. 17 பந்தில் 18 ரன் (2 பவுண்டரி) எடுத்த நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சகாரியாவின் பந்து வீச்சை ஓங்கி அடித்து கேட்ச் ஆகிப்போனார். இறுதிகட்டத்தில் வெய்ன் பிராவோவின் அதிரடியால் ஸ்கோர் 180-ஐ கடந்தது.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. பிராவோ 20 ரன்களுடன் (8 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

மிரட்டிய சுழல்

அடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மனன் வோரா (14 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (1 ரன்) சொற்ப ரன்னில் நடையை கட்டினர். மிடில் வரிசையில் ராஜஸ்தானின் பேட்டிங் வரிசையை சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலியும், ரவீந்திர ஜடோஜாவும் சீர்குலைத்தனர். அபாயகரமான ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் (49 ரன், 5 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் (2 ரன்) இவர்களது சுழல் வலையில் சிக்க அதன் பிறகு அந்த அணியால் நிமிர முடியவில்லை. முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான ரூ.16¼ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் இந்த முறை டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

20 ஓவர்களில் ராஜஸ்தானால் 9 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை ருசித்தது. மொயீன் அலி 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்திய ஜடேஜா 4 கேட்ச் செய்து அசத்தினார். சென்னை அணிக்காக டோனி கேப்டனாக ஆடிய 200-வது ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்ட்யா.!
முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
2. இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன்கள் எடுத்தது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது.
4. தனி விமானத்தில் இந்தியா வந்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி
நியூசிலாந்து - இந்தியா இடையேயான முதல் 20 ஓவர் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
5. வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர்நாயகன் விருது நியாயமற்றது... பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு இந்த 20 ஓவர் உலககோப்பையின் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.