வெற்றி கணக்கை தொடங்குமா ஐதராபாத்?


வெற்றி கணக்கை தொடங்குமா ஐதராபாத்?
x
தினத்தந்தி 21 April 2021 3:53 AM GMT (Updated: 21 April 2021 3:53 AM GMT)

இந்த சீசனில் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணி ஐதராபாத் சன்ரைசர்ஸ் தான்.

அந்த அணி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்திலும், பெங்களூருவுக்கு எதிராக 6 ரன் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 13 ரன் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. கடைசி 2 ஆட்டங்களில் அந்த அணி இலக்கை விரட்டுகையில் 145 ரன்களை கூட தாண்டவில்லை. ஐதராபாத் அணியின் மிடில் வரிசை பேட்டிங் சொதப்பலும், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், டி.நடராஜன் ஆகியோர் சோபிக்காததும் பின்னடைவுக்கு காரணமாகும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் முறையே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், அந்த அணியின் பவுலிங் இன்னும் மேம்பட வேண்டியது அவசியமானதாகும். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சில் பழைய பார்ம் தெரியவில்லை. இதுவரை ரன் மழைக்கு அனுகூலமான மும்பை மைதானத்தில் ஆடிய பஞ்சாப் அணி முதல்முறையாக மந்தமான தன்மை கொண்ட ஆடுகளமான சென்னையில் அடியெடுத்து வைக்கிறது. இங்குள்ள ஆடுகள சூழ்நிலைக்கு தகுந்தபடி திட்டமிட்டு செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.

ஐதராபாத் அணி வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக போராடும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Next Story