‘நல்ல தொடக்கத்தை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம்’ மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டி


‘நல்ல தொடக்கத்தை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம்’ மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
x
தினத்தந்தி 22 April 2021 3:16 AM GMT (Updated: 22 April 2021 3:18 AM GMT)

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.

சென்னை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. முதலில் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. 6.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 67 ரன்கள் திரட்டி இருந்த அந்த அணி அதன் பிறகு விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் பந்து வீசுகையில் மும்பை அணி கூடுதல் நேரம் எடுத்து கொண்டது. இதற்காக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு இருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா வெளியேறியதால் மும்பை அணியை 2-வது பாதியில் பொல்லார்ட் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘எங்களுக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை பார்க்கும் போது, மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்திருக்க ேவண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. ‘பவர்பிளே’யில் கிடைத்த நல்ல தொடக்கத்தை நாங்கள் பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம். இந்த தவறை மீண்டும் செய்துள்ளோம். எல்லா பாராட்டுகளும் டெல்லி பவுலர்களையே சாரும். அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை அதிகரித்ததுடன் விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். பனியின் தாக்கம் இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த சில போட்டிகளுடன் ஒப்பிடும் போது, இதில் பனியால் பந்தை பிடித்து வீசுவதில் கடினமாக இருக்கவில்லை. எனவே பனியால் பாதிப்பு என்று சொல்ல முடியாது. வெற்றி பெற வேண்டுமானால் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

Next Story