20 ஓவர் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி


20 ஓவர் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 24 April 2021 12:24 AM GMT (Updated: 24 April 2021 12:24 AM GMT)

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.

சீன் வில்லியம்ஸ் ஆடாததால் பிரன்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணியை வழிநடத்தினார். ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினாஷி கமுனுகாம்வி 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் ஜிம்பாப்வே அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 41 ரன்னும், டேனிஷ் அஜிஸ் 22 ரன்னும், முகமது ரிஸ்வான் 13 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினார்கள். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுக் ஜோங்வி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

20 ஓவர் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். அந்த அணிக்கு எதிராக இதற்கு முன்பு நடந்த 15 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வென்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 11 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Next Story