ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை துவம்சம் செய்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ெதாடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் நிகிடி, மொயீன் அலி நீக்கப்பட்டு இம்ரான் தாஹிர், பிராவோ இடம் பிடித்தனர். பெங்களூரு அணியில் கேன் ரிச்சர்ட்சன், ஷபாஸ் அகமதுவுக்கு பதிலாக டேன் கிறிஸ்டியன், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அஸ்திவாரம் அமைத்து ெகாடுத்த இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் திரட்டினர். ஸ்கோர் 74 ஆக உயர்ந்த போது ருதுராஜ் (33 ரன், 25 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து சுரேஷ் ரெய்னா, பிளிஸ்சிஸ்சுடன் கைகோர்த்தார். வாஷிங்டன் சுந்தர், சைனியின் ஓவர்களில் சிக்சர்களை ஓடவிட்ட ரெய்னா 24 ரன்னில் (18 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஹர்ஷல் பட்டேலின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் பிளிஸ்சிஸ்சும் (50 ரன், 41 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார்.

ஜடேஜா கலக்கல்

அடுத்து வந்த ஜடேஜா ரன் கணக்கை தொடங்கும் முன்பே கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை டேன் கிறிஸ்டியன் நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜடேஜா விசுவரூபம் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷர் பட்டேல் வீசிய இறுதி ஓவரில் 5 சிக்சரும், ஒரு பவுண்டரியும் தெறிக்கவிட்டு எதிரணியை திக்குமுக்காட வைத்து விட்டார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது. ஜடேஜா 62 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் டோனி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

கோலி 8 ரன்

பின்னர் 192 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து பிரிந்தனர். கோலி 8 ரன்னில் சாம் கர்ரனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டார். அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல் (34 ரன், 15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் ெவளியேற்றப்பட்டார்.

மிடில் வரிசையை ரவீந்திர ஜடேஜா தனது சுழல் ஜாலத்தால் நிலைகுலைய செய்தார். ஆபத்தான பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல் (22 ரன்), டிவில்லியர்ஸ் (4 ரன்) இருவரும் ஜடேஜாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார்கள். அத்துடன் பெங்களூருவின் நம்பிக்கையும் சிதைந்தது. பின்வரிசையில் எந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்கவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய அந்த அணியால் 9 விக்கெட்டுக்கு 122 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அரைசதத்துடன் 3 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக பிரகாசித்த ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சென்னைக்கு 4-வது வெற்றி

இதன் மூலம் தனது முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டிருந்த பெங்களூரு அணியின் வீறுநடை முடிவுக்கு வந்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இந்த சீசனில் மும்பையில் நடந்த கடைசி ஆட்டம் இதுவாகும்.

ஸ்கோர் போர்டு

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் (சி) ஜாமிசன் (பி) சாஹல் 33

பிளிஸ்சிஸ் (சி) கிறிஸ்டியன்(பி) ஹர்ஷல் 50

ரெய்னா (சி) தேவ்தத் (பி) ஹர்ஷல் 24

அம்பத்தி ராயுடு (சி) ஜாமிசன் (பி) ஹர்ஷல் 14

ரவீந்திர ஜடேஜா (நாட்-அவுட்) 62

டோனி (நாட்-அவுட்) 2

எக்ஸ்டிரா 6

மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 191

விக்கெட் வீழ்ச்சி: 1-74, 2-111, 3-111, 4-142

பந்து வீச்சு விவரம்

முகமது சிராஜ் 4-0-32-0

ஜாமிசன் 3-0-31-0

யுஸ்வேந்திர சாஹல் 3-0-24-1

நவ்தீப் சைனி 2-0-27-0

ஹர்ஷல் பட்டேல் 4-0-51-3

டேன் கிறிஸ்டியன் 2-0-12-0

வாஷிங்டன் சுந்தர் 2-0-13-0

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

விராட் கோலி (சி)டோனி (பி) கர்ரன் 8

தேவ்தத் படிக்கல் (சி) ரெய்னா (பி) தாகூர் 34

வாஷிங்டன் சுந்தர்( சி) ருதுராஜ் (பி) ஜடேஜா 7

மேக்ஸ்வெல் (பி) ஜடேஜா 22

டிவில்லியர்ஸ் (பி) ஜடேஜா 4

டேன் கிறிஸ்டியன் (ரன்-அவுட்) 1

கைல் ஜாமிசன் (ரன்-அவுட்) 16

ஹர்ஷல் பட்டேல் (பி) தாஹிர் 0

நவ்தீப் சைனி (சி) ரெய்னா (பி) தாஹிர் 2

யுஸ்வேந்திர சாஹல் (நாட்-அவுட்) 8

முகமது சிராஜ் (நாட்-அவுட்) 12

எக்ஸ்டிரா 8

மொத்தம் (20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு) 122

விக்கெட் வீழ்ச்சி: 1-44, 2-54, 3-65, 4-79, 5-81, 6-83, 7-89, 8-94, 9-103

பந்து வீச்சு விவரம்

தீபக் சாஹர் 2-0-25-0

சாம் கர்ரன் 4-0-35-1

ஷர்துல் தாகூர் 4-0-11-1

ரவீந்திர ஜடேஜா 4-1-13-3

இம்ரான் தாஹிர் 4-0-16-2

பிராவோ 2-0-19-0

ஒரே ஓவரில் 37 ரன் விளாசிய ஜடேஜா

பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரை சென்னை வீரர் ஜடேஜா சந்தித்தார். இதில் ஒரு பந்து நோ-பாலாக வீசப்பட ஜடேஜா 5 சிக்சரும், ஒரு பவுண்டரியும் நொறுக்கினார். இன்னொரு பந்தில் 2 ரன் எடுத்தார். ஆக எக்ஸ்டிராவையும் சேர்த்து மொத்தம் இந்த ஓவரில் 37 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த கிறிஸ் கெய்லின் சாதனையை (2011-ம் ஆண்டில் கொச்சி அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 37 ரன் எடுத்தார்) சமன் செய்தார்.


Next Story