‘மனிஷ் பாண்டேவை நீக்கியது கடினமான முடிவு’; ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி


‘மனிஷ் பாண்டேவை நீக்கியது கடினமான முடிவு’; ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி
x
தினத்தந்தி 26 April 2021 9:34 PM GMT (Updated: 26 April 2021 9:34 PM GMT)

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மனிஷ் பாண்டேவை நீக்கியது கடினமான முடிவு என்று ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்தார்.

சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவரில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. முதலில் ஆடிய டெல்லி அணி பிரித்வி ஷாவின் (53 ரன்கள்) அரைசதத்தின் உதவியுடன் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனின் (ஆட்டம் இழக்காமல் 66 ரன்கள்) அரைசதத்தால் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டையில் (சமனில்) முடிந்தது.

இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சீசனில் முதல் சூப்பர் ஓவர் இதுவாகும். சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோர் களம் இறங்கினர். அக்ஷர் பட்டேல் வீசிய அந்த ஓவரில் ஐதராபாத் அணி 7 ரன் எடுத்தது. அடுத்து 8 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரிஷாப் பண்ட், ஷிகர் தவான் ஆடினார்கள். ரஷித் கான் வீசிய அந்த ஓவரில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஷிகர் தவான் பேட்டி

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்டுக்கு பதிலாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நிச்சயமாக இது ‘திரில்லிங்’கான ஆட்டமாக இருந்தது. இந்த ஆட்டத்தை நாங்கள் எளிதாக முடித்து இருக்க வேண்டும். சூப்பர் ஓவர் வரை போய் இருக்கக்கூடாது. ஆனால் அதுவும் விளையாட்டில் ஒரு அங்கம் தான். பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது, குறிப்பாக ‘பவர்பிளே’வுக்கு பிறகு பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆடுகளத்தில் பந்து நன்கு நின்று திரும்பியது. கேன் வில்லியம்சன் மிசச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு சாம்பியன் வீரர். இருப்பினும் நாங்கள் இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சூப்பர் ஓவரில் எதிரணியினர் கவனக்குறைவால் ஒரு ரன்னை இழந்தனர். இதுபோன்ற சிறிய விஷயங்கள் கூட ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது எங்களுக்கு சாதகமாக அமைந்ததுடன், இறுதியில் வெற்றிக்கும் வழிவகுத்தது. இந்த ஆடுகளத்தை விட ஆமதாபாத் ஆடுகளம் நன்றாக இருக்கும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

வார்னர் கருத்து

தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவிக்கையில், ‘பவர்பிளேவுக்கு பிறகு எங்கள் பந்து வீச்சாளர்கள் மீண்டு வந்து எதிரணியினரை கட்டுப்படுத்திய விதம் அருமையாக இருந்தது. விஜய் சங்கர் எங்களது பிரதான பவுலர் இல்லை என்றாலும் சிறப்பாக பந்து வீசினார். ஜானி பேர்ஸ்டோ தொடக்கத்திலும், கேன் வில்லியம்சன் இறுதி வரையும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மனிஷ் பாண்டேவை ஆடும் லெவனில் சேர்க்காதது தேர்வாளர்கள் எடுத்த கடினமான முடிவாகும். அதற்காக விராட் சிங்கை குறை சொல்ல முடியாது. டெல்லி அணியினர் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பினார்கள். உலக தரம் வாய்ந்த பீல்டரிடம் பந்தை அடித்து விட்டு நீங்கள் ரன் எடுக்க ஓடினால் பத்தில் ஒன்பது முறை ‘ரன்-அவுட்’ ஆக நேரிடும்’ என்றார்.


Next Story