ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றி - ருதுராஜ், பிளிஸ்சிஸ் அரைசதம் விளாசினர்


ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றி - ருதுராஜ், பிளிஸ்சிஸ் அரைசதம் விளாசினர்
x
தினத்தந்தி 29 April 2021 1:04 AM GMT (Updated: 29 April 2021 1:04 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 5-வது வெற்றியை பதிவு செய்தது.

புதுடெல்லி,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, விராட் சிங் நீக்கப்பட்டு மனிஷ் பாண்டே, சந்தீப் ஷர்மா திரும்பினர். சென்னை அணியில் வெய்ன் பிராவோ, இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, நிகிடி இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ 7 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் வார்னரும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று ஆடினர். பாண்டே பேட்டிங்கில் சற்று வேகம் காட்டினாலும் வார்னரின் பேட்டிங்கில் தடுமாற்றம் தெரிந்தது. பாண்டே 35 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். வார்னர் ஜடேஜாவின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து தனது 50-வது ஐ.பி.எல். அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் வார்னர் தான். இருப்பினும் அரைசதத்துக்கு 50 பந்துகளை சந்தித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது மந்தமான அரைசதமாக இது அமைந்தது.

அணியின் ஸ்கோர் 128 ஆக உயர்ந்த போது (17.1 ஓவர்) வார்னர் 57 ரன்களில் (55 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அதே ஓவரில் மனிஷ் பாண்டேவும் (61 ரன், 46 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். கடைசி கட்டத்தில் வில்லியம்சன் அதிரடி காட்டினார். ஷர்துல் தாகூரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். இதே போல் கேதர் ஜாதவ் இறுதி ஓவரில் பவுண்டரி, சிக்சர் விரட்டி 170 ரன்களை கடக்க வைத்தார்.

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 26 ரன்களுடனும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேதர் ஜாதவ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் நிகிடி 2 விக்கெட்டும், சாம் கர்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. ெதாடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் அருமையாக விளையாடி பதிலடி கொடுத்தனர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ஸ்கோரை மளமளவென திரட்டினர். தொடர்ந்து 3-வது முறையாக முதல் விக்ெகட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்த இவர்கள் இடைவிடாது ரன்வேட்டை நடத்தி அசத்தினர்.

11-வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை தொட்டது. வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடியை ஒரு வழியாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பிரித்தார். ஸ்கோர் 129 ரன்களை எட்டிய போது ருதுராஜ் (75 ரன், 44 பந்து, 12 பவுண்டரி) போல்டு ஆனார். மறுமுனையில், தொடர்ந்து 3-வது அரைசதம் அடித்த பிளிஸ்சிஸ் 56 ரன்களில் (38 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதற்கிடையே மொயீன் அலி 15 ரன்னில் வீழ்ந்தார்.

இதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா (7 ரன்), சுரேஷ் ரெய்னா (17 ரன்) கூட்டணி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. சென்னை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ெபற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடி 5-வது ெவற்றியை பெற்ற சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஐதராபாத்துக்கு விழுந்த 5-வது அடி இதுவாகும்.

Next Story