ஐ.பி.எல். தொடரில் இருந்து நடுவர் நிதின் மேனன் விலகல்


ஐ.பி.எல். தொடரில் இருந்து நடுவர் நிதின் மேனன் விலகல்
x
தினத்தந்தி 30 April 2021 12:08 AM GMT (Updated: 30 April 2021 12:08 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் இருந்து நடுவர் நிதின் மேனன் விலகி இருக்கிறார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எலைட் பேனல் நடுவரான நிதின் மேனன் திடீரென போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த நிதின் மேனனின் மனைவி மற்றும் தாயார் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களை கவனிக்கும் பொருட்டு அவர் நடுவர் பணியில் இருந்து விலகி இருக்கிறார். இதேபோல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடுவரான பால் ரீபெல் கொரோனா அச்சம் காரணமாக தனது நாட்டுக்கு திரும்ப ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக முடிவு செய்தார். ஆனால் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் வேறுவழியின்றி அவர் தனது நாடு திரும்பும் முடிவை கடைசி நேரத்தில் கைவிட்டுள்ளார். எனவே அவர் ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து நடுவராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனது குடும்பத்தினர் கொரோனா பாதுகாப்புக்கு ஆளானதால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) இந்த போட்டி தொடரில் இருந்து விலகியது நினைவிருக்கலாம். இதேபோல் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து பாதியில் விலகி நாடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story