‘தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்’ - ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி


‘தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்’ - ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி
x
தினத்தந்தி 30 April 2021 12:23 AM GMT (Updated: 30 April 2021 12:23 AM GMT)

‘தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்’ என ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை துவம்சம் செய்து தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது. முதலில் ஆடிய ஐதராபாத் அணி டேவிட் வார்னர் (57 ரன்கள்), மனிஷ் பாண்டே (61 ரன்கள்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட் (75 ரன்), பாப் டுபிளிஸ்சிஸ் (56 ரன்) ஆகியோர் அமைத்த வலுவான அடித்தளத்தால் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்து எளிதில் வெற்றி இலக்கை கடந்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘எங்களது பேட்டிங் சூப்பராக இருந்தது. அதற்காக பவுலிங் நன்றாக இல்லை என்று அர்த்தமில்லை. டெல்லி ஆடுகளம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நன்றாக இருந்தது. பனியின் தாக்கம் எதுவுமில்லை. எங்கள் அணியின் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் அருமையாக இருந்தது. இந்த சீசனில் எங்கள் அணியின் பிரச்சினைகளை சீக்கிரமாக ஆலோசித்து சரி செய்து விட்டோம். கடந்த ஆண்டு 5-6 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாததும், நீண்ட கால தனிமைப்படுத்துதலும் எங்களுக்கு கடினமானதாக அமைந்தது. இந்த முறை எங்கள் அணியினர் அனைவரும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். கடந்த 8-10 வருடங்களில் எங்கள் அணியில் இருந்து வீரர்களை மாற்றவில்லை. அதே போல் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத வீரர்களையும் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். வீரர்கள் அறையில் சுமுகமான சூழ்நிலை நிலவ வேண்டியது முக்கியமானதாகும். விளையாடாத வீரர்களுக்கு கூடுதலாக பாராட்டுகள் தெரிவிக்க வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவிக்கையில், ‘நான் பேட்டிங் ஆடிய விதத்தை பார்க்கையில் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். நான் நிதானமாக ஆடியதுடன் பீல்டர்களை நோக்கியே பந்தை அடித்தேன். மனிஷ் பாண்டே பேட்டிங் செய்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. வில்லியம்சன், கேதர் ஜாதவின் பேட்டிங் எங்கள் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. முடிவில் தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் கடைசி வரை போராடினோம். ஆனால் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்கள்’ என்றார்.

Next Story