கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை 3-வது வெற்றி + "||" + IPL Cricket: Mumbai beat Rajasthan by 3 wickets

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை 3-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை 3-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை 3-வது வெற்றியை பெற்றது.
புதுடெல்லி, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சை சந்தித்தது. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக இஷான் கிஷன் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நிலே சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தார். இதன்படி ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். ஓரளவு நல்ல தொடக்கம் உருவாக்கி தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் (7.4 ஓவர்) திரட்டினர். ராகுல் சாஹரின் சுழலில் சிக்சர் விரட்டிய ஜோஸ் பட்லர் (41 ரன், 32 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த பந்திலும் சிக்சருக்கு முயற்சித்த போது ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஜெய்ஸ்வாலும் (32 ரன்) அவரது பந்துவீச்சுக்கே இரையானார்.

இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் (42 ரன், 27 பந்து, 5 பவுண்டரி), ஷிவம் துபே (35 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. டேவிட் மில்லர் (7 ரன்), ரியான் பராக் (8 ரன்) களத்தில் இருந்தனர்.

அடுத்து 172 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னில் ஏமாற்றினாலும் இந்த முறை மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் நிலைத்து நின்று விளையாடினார். விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மட்டையை சுழட்டிய அவர் வெற்றிக்கு அடித்தளம் போட்டார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 16 ரன்னிலும், குருணல் பாண்ட்யா 39 ரன்னிலும் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர்.

இறுதியில் பொல்லார்ட் பவுண்டரி விரட்டி இலக்கை எட்ட வைத்தார். மும்பை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி காக் 70 ரன்னுடனும் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), பொல்லார்ட் 16 ரன்னுடனும் (8 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். டி காக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.6-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு 4-வது தோல்வியாகும்.

தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘நாங்கள் 20-25 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆடுகளம் பேட்டிங்குக்கு அருமையாக இருந்தது. நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் இன்னும் அதிக ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம். திறமை மீது நம்பிக்கை வைத்து, நேர்மறை எண்ணத்துடன் அச்சமின்றி விளையாட வேண்டும்’ என்றார்.