கிரிக்கெட்

பிரித்வி ஷா அதிரடி அரைசதம்: டெல்லியிடம் வீழ்ந்தது கொல்கத்தா + "||" + Prithviraj Shah Action Fifty: Kolkata fell to Delhi

பிரித்வி ஷா அதிரடி அரைசதம்: டெல்லியிடம் வீழ்ந்தது கொல்கத்தா

பிரித்வி ஷா அதிரடி அரைசதம்: டெல்லியிடம் வீழ்ந்தது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, டெல்லியிடம் பணிந்தது. பிரித்வி ஷா 82 ரன்கள் விளாசி அட்டகாசப்படுத்தினார்.
ஆமதாபாத்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தோள்பட்டை வலியால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக லலித் யாதவ் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி டெல்லி பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது. நிதிஷ் ராணா 15 ரன்னிலும், திரிபாதி 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். கேப்டன் மோர்கன், சுனில் நரின் இருவரும் லலித் யாதவின் சுழலில் அடுத்தடுத்து டக்-அவுட் ஆனார்கள். இதற்கு மத்தியில் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் 43 ரன்களில் ( 38 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

ஒரு கட்டத்தில் 109 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான நிலையில் தவித்த அணியை கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் மீட்டெடுத்தார். ரபடாவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட அவர் அணி 150 ரன்களை கடக்க உதவினார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. ரஸ்செல் 45 ரன்களுடனும் (27 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கம்மின்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் சேகரித்தனர். டெல்லி தரப்பில் அக்‌ஷர் பட்டேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 155 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணியின் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா 6 பந்துகளையும் பவுண்டரிக்கு தெறிக்கவிட்டு மிரள வைத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து கொல்கத்தா பவுலர்கள் மீள்வதற்குள் பிரித்வி ஷா ரன்மழை பொழிந்து விட்டார். 18 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஐ.பி.எல்.-ல் 2-வது அதிவேக அரைசதம் இதுவாகும். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் விளாசினர். இந்த சீசனில் பவர்-பிளேயில் ஒரு அணி எடுத்த அதிகபட்சம் இது தான்.இவர்கள் தொடக்க விக்கெட்டுக்கு 132 ரன்கள் (13.5 ஓவர்) குவித்து வெற்றிப்பயணத்தை எளிதாக்கினர். தவான் 46 ரன்னிலும் (47 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிரித்வி ஷா 82 ரன்களிலும் (41 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), அடுத்து வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் 16 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7-வது லீக்கில் ஆடிய டெல்லி அணிக்கு இது 5-வது வெற்றியாகும். கொல்கத்தா சந்தித்த 5-வது தோல்வியாகும்.