கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ஐ.பி.எல். சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கும் நிகோலஸ் பூரன் - தவான், உனட்கட்டும் நிதியுதவி


கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ஐ.பி.எல். சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கும் நிகோலஸ் பூரன் - தவான், உனட்கட்டும் நிதியுதவி
x
தினத்தந்தி 1 May 2021 12:47 AM GMT (Updated: 1 May 2021 12:47 AM GMT)

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ஐ.பி.எல். சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கும் நிகோலஸ் பூரன் நேற்று அறிவித்தார். இதை தொடர்ந்து தவான், உனட்கட்டும் நிதியுதவி வழங்குவதாக கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ்சின் 2-வது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை வசதிகள் அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு தரப்பினரும் உதவிகள் அளிக்க முன்வந்துள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அறிவித்துள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்ச்சாளர் பிரெட்லீ ஆகியோரும் தங்களால் முடிந்த உதவிக்கரத்தை நீட்டினார்கள்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட்இண்டீசை சேர்ந்த பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன் ஐ.பி.எல். போட்டியில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்கு வழங்குவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கொரோனாவால் உலகளவில் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது இந்தியா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இக்கட்டான நிலையில் இருப்பவர்களுக்கு உதவவும் எனது சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு உதவ ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முடிவு செய்து இருக்கிறோம்’ என்று பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும் என்றும் நம்மால் முடிந்ததை இணைந்து செய்வோம் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல் கொரோனா பாதிப்புக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாகவும், ஐ.பி.எல். போட்டியில் விருதுகளின் மூலம் கிடைக்கும் தொகை அனைத்தையும் கொடுப்பதாகவும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஆடும் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் தனது சம்பளத்தில் 10 சதவீத தொகையை கொரோனா மருத்துவ உதவிக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.

Next Story