ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 3-வது வெற்றி பெங்களூருவை சாய்த்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 3-வது வெற்றி பெங்களூருவை சாய்த்தது
x
தினத்தந்தி 1 May 2021 12:54 AM GMT (Updated: 1 May 2021 12:54 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு அதிர்ச்சி அளித்து பஞ்சாப் அணி 3-வது வெற்றியை ருசித்தது.

ஆமதாபாத்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 26-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் காயமடைந்த மயங்க் அகர்வால் மற்றும் மோசஸ் ஹென்ரிக்ஸ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹர்பிரீத் பிரார், பிரப்சிம்ரன்சிங், ரிலி மெரிடித் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் கேட்ச் ஆன நிலையில் 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெய்லும் கைகோர்த்தனர். அதிரடி காட்டிய இவர்கள் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். கைல் ஜாமிசனின் ஒரே ஓவரில் கெய்ல் 5 பவுண்டரி சாத்தினார். யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் 2 சிக்சரை பறக்க விட்டார். 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்ததை பார்த்த போது, 200 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது.

ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ரன்வேகம் சற்று தணிந்தது. ஸ்கோர் 99 ஆக உயர்ந்த போது கெய்ல் 46 ரன்னில் (24 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த நிேகாலஸ் பூரன் (0), தீபக் ஹூடா (5 ரன்), ஷாருக்கான் (0) அடுத்தடுத்து வெளியேற, பஞ்சாப்புக்கு சிக்கல் ஏற்பட்டது.

மறுமுனையில் தனது 25-வது அரைசதத்தை கடந்த கேப்டன் ராகுல் ரன்ரேட்டை உயர்த்த போராடினார். இறுதி ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேலின் பந்து வீச்சில் ராகுல்- ஹர்பிரீத் இணைந்து 2 பவுண்டரி, 2 சிக்சர் விரட்டியடித்து ஸ்கோருக்கு வலுவூட்டினர்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது. ராகுல் 91 ரன்களுடனும் (57 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 25 ரன்னுடனும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

அடுத்து 180 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் (7ரன்) மெரிடித்தின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதன் பின்னர் கேப்டன் விராட் கோலியும், ரஜத் படிதரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் ஸ்ேகார் மந்தமாகி நெருக்கடிக்குள்ளானார்கள்.

ஸ்கோர் 62 ஆக (10.1 ஓவர்) உயர்ந்த போது விராட் கோலி (35 ரன், 34 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிராரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ‘அதிரடி புயல்’ மேக்ஸ்வெல்லும் (0) அவரது பந்து வீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஹர்பிரீத்தின் அடுத்த ஓவரில் டிவில்லியர்சும் (3 ரன்) சிக்க, பெங்களூரு அணி முற்றிலும் சீர்குலைந்தது. அதன் பிறகு அவர்களால் நிமிர முடியவில்லை. ரஜத் படிதர், ஹர்ஷல் பட்டேல் தங்களது பங்குக்கு தலா 31 ரன்கள் எடுத்தனர்.

20 ஓவர்களில் பெங்களூரு அணியால் 8 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ஹர்பிரீத் பிரார் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்து ஹீரோவாக மின்னினார். 7-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூரு அணி சந்தித்த 2-வது தோல்வியாகும்.

Next Story