ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் அதிரடி நீக்கம் - புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமனம்


ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் அதிரடி நீக்கம் - புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமனம்
x
தினத்தந்தி 2 May 2021 12:24 AM GMT (Updated: 2 May 2021 12:24 AM GMT)

ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் அதிரடி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமனம் ஆனார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 5-ல் தோல்வி, ஒரு வெற்றி என்று 2 புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்கள் மட்டுமே எடுத்தார். தனது மந்தமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். அவரது மோசமான செயல்பாட்டால் அணி நிர்வாகம் கடும் அதிருப்திக்குள்ளானது. அத்துடன் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மனிஷ் பாண்டேவை நீக்கியது கடினமான முடிவு, இந்த முடிவை எடுத்தது தேர்வாளர்கள் தான் என்று வெளிப்படையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் (ஆஸ்திரேலியா) அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எஞ்சிய போட்டிகளில் கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) அணியை வழிநடத்துவார் என்று ஐதராபாத் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களின் சேர்க்கையில் மாற்றம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அணி நிர்வாகம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய சீசனில், களத்திலும், வெளியிலும் வார்னர் தொடர்ந்து அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வார்னருக்கு களம் காணும் அணியில் இடம் கிடைக்காது என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) அல்லது ஜாசன் ராய் (இங்கிலாந்து) சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 34 வயதான வார்னர் இதுவரை நடந்துள்ள 6 ஆட்டங்களில் 3, 54, 36, 37, 6, 57 ரன் வீதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற வார்னர் 2016-ம் ஆண்டில் கோப்பையை வென்றுத் தந்தார். அவரது தலைமையில் ஐதராபாத் அணி 67 ஆட்டங்களில் விளையாடி 35-ல் வெற்றியும், 30-ல் தோல்வியும், 2-ல் டையும் கண்டுள்ளது.

Next Story