பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம் - பெங்களூரு கேப்டன் கோலி பேட்டி


பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம் - பெங்களூரு கேப்டன் கோலி பேட்டி
x
தினத்தந்தி 2 May 2021 12:33 AM GMT (Updated: 2 May 2021 12:33 AM GMT)

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று பெங்களூரு கேப்டன் கோலி கூறினார்.

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்தது. இதில் கேப்டன் லோகேஷ் ராகுல் (91 ரன்), கிறிஸ் கெய்ல் (46 ரன்) ஆகியோரது அபார பேட்டிங்கின் உதவியோடு பஞ்சாப் நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து அடங்கியது. 25 ரன்களுடன், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய பஞ்சாப் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘பஞ்சாப் அணி ஓரளவு நல்ல தொடக்கம் கண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தம் கொடுத்தோம். 5 விக்கெட்டுக்கு 116 ரன்களுடன் இருந்த அவர்களை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க ேவண்டும். 160 ரன்கள் இலக்கு என்றால் இங்கு ‘சேசிங்’ செய்திருக்க முடியும். ஆனால் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். பவுண்டரிகள் அடிக்கக்கூடிய மோசமான பந்துகளை அதிகமாக வீசிவிட்டோம்.

பேட்டிங்கை பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேனாக தொடக்கத்தில் சில வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்த்திருக்கலாம். பார்ட்னர்ஷிப்பும், 110-க்கும் மேல் ஸ்டிரைக் ரேட்டும் தேவையாக இருந்தது. ஆனால் ஒரு பேட்டிங் குழுவாக அதை செய்ய தவறி விட்டோம். பேட்டிங்கில் எந்த ஒரு தருணத்திலும் உத்வேகம் கிடைக்கவில்லை. பேட்டிங்கில் உள்ள பிரச்சினையை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் அருமையாக பந்து வீசினர்.

ரஜத் படிதரை பேட்டிங்கில் 3-வது வரிசையில் ஆடவைக்கும் போது அவர் சுதந்திரமாக விளையாடுகிறார். அத்துடன் அந்த வரிசையில் ஆடும் போது தான் எங்களது பேட்டிங் வரிசை சரிசம கலவையில் இருக்கிறது. ரஜத் படிதர் தரமான வீரர். இன்றைய இரவு அவருக்குரியதாக அமையவில்லை. யாராவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று ஆடியிருந்தால் இலக்கை நெருங்கியிருப்போம். எங்களது திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்த முடியவில்லை. இறுதிகட்டத்தில் ஹர்ஷல் பட்டேலும் (31 ரன்), கைல் ஜாமிசனும் (16 ரன்) கொஞ்சம் ரன் எடுத்தனர். இல்லாவிட்டால் தோல்வி வித்தியாசம் இன்னும் அதிகமாகியிருக்கும்’ என்றார்.

Next Story