சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மும்பை அசத்தல் வெற்றி - பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்


சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மும்பை அசத்தல் வெற்றி - பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்
x
தினத்தந்தி 2 May 2021 12:38 AM GMT (Updated: 2 May 2021 12:38 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 219 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் விரட்டிப்பிடித்து திரில் வெற்றியை பெற்றது. பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்.

புதுடெல்லி,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை அணியில் இரு மாற்றமாக நாதன் கவுல்டர்-நிலே, ெஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு தவால் குல்கர்னி, ஜேம்ஸ் நீஷம் இடம் பிடித்தனர். சென்னை அணியில் மாற்றம் ஏதுமில்லை.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப்டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முதல் ஓவரிலேயே ருதுராஜ் (4 ரன்) கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் பிளிஸ்சிஸ்சுடன், ஆல்-ரவுண்டர் மொயீன் அலி கைகோர்த்தார். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் மொயீன் அலி மும்பை பந்து வீச்சை பின்னியெடுத்தார். டிரென்ட் பவுல்ட், பும்ராவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். பிளிஸ்சிஸ்சும் ஏதுவான பந்துகளை தண்டிக்க தவறவில்லை. பும்ராவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டியடித்தார். இதனால் ரன்ரேட் 10-ஐ கடந்தது.

ஸ்கோர் 112 ஆக உயர்ந்த போது மொயீன் அலி (58 ரன், 36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) பும்ரா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார். மறுமுனையில் தொடர்ந்து 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்த பிளிஸ்சிஸ் 50 ரன்களில் (28 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) பொல்லார்ட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னாவும் (2 ரன்) சிக்சருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை தாரைவார்த்தார். ரெய்னாவுக்கு இது 200-வது ஐ.பி.எல். ஆட்டம் என்பது கவனிக்கத்தக்கது.

8 பந்து இடைவெளியில் அடுத்தடுத்து 3 விக்கெட் சரிந்ததால் சென்னை அணி லேசான தடுமாற்றத்திற்கு உள்ளானது. இதன் பின்னர் 5-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவும், அம்பத்தி ராயுடுவும் இணைந்தனர். இரண்டு ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் அதன் பிறகு அதிரடியில் குதித்தனர். குறிப்பாக அம்பத்தி ராயுடு சரவெடியாய் வெடித்தார். தவால் குல்கர்னி, பும்ரா, பவுல்ட்டின் ஓவர்களில் சிக்சர்களை தெறிக்கவிட்டு பிரமிக்க வைத்த அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் அரைசதத்தை எட்டி அசத்தினார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அம்பத்தி ராயுடு 72 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), ஜடேஜா 22 ரன்களுடனும் (22 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அவரது மோசமான பந்து வீச்சு இது தான். இதற்கு முன்பு 55 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அவரது சொதப்பல் பந்து வீச்சாக இருந்தது.

அடுத்து 219 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. கேப்டன் ரோகித் சர்மாவும் (35 ரன்), குயின்டான் டி காக்கும் (38 ரன்) நேர்த்தியான தொடக்கம் தந்தனர். சூர்யகுமார் யாதவ் (3 ரன்) சோபிக்கவில்லை. இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் விசுவரூபம் எடுத்தார். ஜடேஜா ஓவரில் 3 சிக்சர், நிகிடி ஓவரில் 2 சிக்சர் நொறுக்கினார். பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவருக்கு குருணல் பாண்ட்யா (32 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். களத்தில் நீயா-நானா? போட்டி நிலவியது. ஹர்திக் பாண்ட்யா 7 பந்தில் 16 ரன்கள் (2 சிக்சர்) விளாசினார்.

கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நிகிடி வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பொல்லார்ட் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான 2 ரன்களை ஓடி எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. பொல்லார்ட் 87 ரன்களுடன் (34 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். முன்னதாக பொல்லார்ட் 68 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பிளிஸ்சிஸ் வீணடித்தார்.

தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.

Next Story