கிரிக்கெட்

வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் கொரோனாவால் பாதிப்பு: கொல்கத்தா-பெங்களூரு ஆட்டம் தள்ளிவைப்பு + "||" + Varun Chakraborty, Sandeep Warrior affected by Corona: Kolkata-Bangalore match postponed

வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் கொரோனாவால் பாதிப்பு: கொல்கத்தா-பெங்களூரு ஆட்டம் தள்ளிவைப்பு

வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் கொரோனாவால் பாதிப்பு: கொல்கத்தா-பெங்களூரு ஆட்டம் தள்ளிவைப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானதால் ஆமதாபாத்தில் நேற்று இரவு நடக்க இருந்த கொல்கத்தா-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கி ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடந்து வருகிறது. தொடக்கத்தில் சென்னை, மும்பையில் நடந்த இந்த ஆட்டம் தற்போது டெல்லி, ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 30-வது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருந்தன.

கொரோனாவால் ஆட்டம் பாதிப்பு

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று உறுதியானது. இதனால் நேற்று இரவு ஆமதாபாத்தில் நடக்க இருந்த கொல்கத்தா-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிற்பகலில் அறிவித்தது. இந்த ஆட்டம் மற்றொரு தேதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிக்கான மாற்று தேதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது குறித்து ஐ.பி.எல். நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட 3-வது சுற்று பரிசோதனையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் மே 3-ந் தேதி (நேற்று) நடக்க இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரது உடல் நிலையையும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை அடுத்து கொல்கத்தா அணி தனது வீரர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்தும் முடிவுக்கு வந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களுடன் கடந்த 48 மணி நேரத்தில் நெருக்கமாக இருந்த வீரர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும், கொல்கத்தா அணி நிர்வாகமும் வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிப்பதில் அக்கறை கொண்டுள்ளது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போட்டி நடைபெறுமா?

ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு அக்ஷர் பட்டேல் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), தேவ்தத் படிக்கல் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் எந்த பிரச்சினையும் இன்றி போட்டி அரங்கேறியது. ஆனால் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறி இந்த போட்டி தொடரில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதுடன், ஒரு ஆட்டமும் முதல்முறையாக பாதிக்கப்பட்டு இருப்பது வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா அணி ஆமதாபாத்தில் நடந்த தனது முந்தைய லீக் ஆட்டத்தில் (ஏப்ரல் 29-ந் தேதி) டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. இதனால் டெல்லி அணி வீரர்களுக்கு கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.பி.எல். போட்டி நடந்து வரும் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் மைதான ஊழியர்கள் 5 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவின் கனவை கலைக்குமா ஐதராபாத்?
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி கண்டு ரன்ரேட்டிலும் வலுவாக இருந்தால் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்கலாம்.
2. டெல்லி அணியின் ஆதிக்கம் தொடருமா?
இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.