‘வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்’; ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி


‘வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்’; ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி
x
தினத்தந்தி 4 May 2021 10:06 PM GMT (Updated: 4 May 2021 10:06 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டி தொடரில் இந்திய வீரர்களுடன் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். 17 ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றதில் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆண்ட்ரூ டை ஆகியோர் பாதியிலேயே நாடு திரும்பி விட்டனர். ஐ.பி.எல்.-ல் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் கூறியுள்ளார்.

எத்தனை வெளிநாட்டு வீரர்கள்

மீதமுள்ள வீரர்களான ேபட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், ஜாசன் பெரேன்டோர்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், பென் கட்டிங், நாதன் கவுல்டர்-நிலே, கிறிஸ் லின், மோசஸ் ெஹன்ரிக்ஸ், ஜய் ரிச்சா்ட்சன், ரிலி ெமரிடித், ேடன் கிறிஸ்டியன், டேனியல் சாம்ஸ் மற்றும் பயிற்சியாளர்கள் ரிக்கி பாண்டிங், சைமன் கேடிச், மைக் ஹஸ்சி உள்பட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொத்தம் 40 பேர் தொடர்ந்து ஐ.பி.எல்.-ல் பங்காற்றினர். இதுதவிர இயான் மோர்கன், சாம் கர்ரன், ஜானி பேர்ஸ்டோ உள்பட 11 இங்கிலாந்து வீரர்கள், டிவில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், குயின்டான் டி காக், டேவிட் மில்லர் உள்பட 11 தென் ஆப்பிரிக்க வீரர்கள், கேன் வில்லியம்சன், டிரென்ட் பவுல்ட், ஜேம்ஸ் நீஷம் உள்பட 10 நியூசிலாந்து வீரர்கள், பொல்லார்ட், கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல் உள்பட 9 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள், ரஷித்கான் உள்பட 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள், ஷகிப் அல்-ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான் என 2 வங்காளதேச வீரர்கள் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் களம் இறங்கி விளையாடினர்.

பிரிஜேஷ் பட்டேல் உறுதி

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இதனால் ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டாலும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் நிலவுகிறது. இந்திய விமானங்களுக்கு வருகிற 15-ந்தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து இருப்பதால் தாங்கள் நாடு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் விடுத்த வேண்டுகோளை அந்த நாட்டு பிரதமரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சில நாட்கள் மாலத்தீவு சென்று விட்டு தடை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது.

நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டில் தனிமைப்படுத்தலை கடைப்பிடித்தால் போதுமானது. எனவே அவர்கள் நாடு திரும்புவதில் பிரச்சினை இருக்காது. வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்களது வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எற்கனவே உறுதி அளித்து இருந்தது. இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேலிடம் நேற்று கேட்ட போது, ‘வெளிநாட்டு வீரர்களை அவர்களது வீட்டுக்கு நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டியது அவசியமானதாகும். அதனை செய்வதற்கான ஒரு வழியை நாங்கள் கண்டுபிடிப்போம்’ என்று தெரிவித்தார்.

இதையொட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.


Next Story