கிரிக்கெட்

கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி நடத்த முயற்சி; சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல் + "||" + IPL postponed due to corona injury Attempt to host the series 20-over World Cup; Information by Chairman Brijesh Patel

கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி நடத்த முயற்சி; சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்

கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி நடத்த முயற்சி; சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்
கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடரை இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவோ அல்லது பிறகோ நடத்த முயற்சி செய்யப்படும் என்று ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்தார்.

ஐ.பி.எல்.தள்ளிவைப்பு

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து ரசிகர்கள் இன்றி அரங்கேறிய இந்த போட்டியில் தொடக்க கட்ட ஆட்டங்கள் சென்னை, மும்பையில் நடந்தது. அடுத்து ஆமதாபாத், டெல்லியில் ஆட்டங்கள் நடந்தன. வருகிற 30-ந் தேதி வரை இந்த போட்டி நடக்க இருந்தது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐ.பி.எல். அணிகளுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவி தாக்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி கொரோனாவில் சிக்கினார். இதனை தொடர்ந்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு பரவியது. இதனால் அந்த அணியினர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அந்த அணிகளின் ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன.

ஒரே நேரத்தில் 4 அணிகளை சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானதால் ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் அவசரமாக கலந்து ஆலோசித்து இந்த சீசனுக்கான ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

விராட்கோலி வீடு திரும்பினார்

ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டதால் இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, மகள் வாமிகா ஆகியோருடன் இணைந்து மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

இந்திய வீரர்கள் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதித்த வீரர்கள் உடனடியாக வீடு திரும்ப முடியாது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை முடிந்து கொரோனா பரிசோதனைக்கு பிறகே வீடு திரும்ப முடியும்.

இங்கிலாந்து வீரர்கள் சென்றனர்

ஆஸ்திரேலியாவுக்கு வருகிற 15-ந் தேதி வரை இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்ல அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மாலத்தீவு மற்றும் இலங்கை சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சிக்கு (ஆஸ்திரேலியா) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவர் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களுடன் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் 10 நாட்கள் டெல்லியில் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு தான் கிளம்ப முடியும்.

இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ்பட்லர், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, ஜாசன் ராய், சாம் கர்ரன், டாம் கர்ரன் ஆகியோர் விமானம் மூலம் நேற்று லண்டன் போய் சேர்ந்தனர். அவர்கள் அந்த நாட்டு அரசின் அனுமதி பெற்ற ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், பேட்ஸ்மேன் டேவிட் மலான், ஆல்-ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டி தொடரின் 60 ஆட்டங்களில் 29 லீக் ஆட்டங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி முடிந்தன. இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. இந்த ஆட்டங்கள் நடைபெற முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பிரிஜேஷ் பட்டேல் பேட்டி

ஐ.பி.எல். தொடர் தள்ளிவைக்கப்பட்ட பிறகு அதன் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஐ.பி.எல். போன்ற போட்டியை தள்ளிவைப்பது என்பது எப்பொழுதும் கடினமான முடிவாகும். ஒன்றிரண்டு அணியினர் பாதித்து இருந்தால் போட்டி அட்டவணையை மாற்றி பார்க்கலாம். வீரர்கள் உள்பட 4 அணிகளை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பது என்பது முடியாத காரியமாகும். இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்காது என்று கருத முடியாது. அத்துடன் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினரின் நலன் மற்றும் நாட்டில் நிலவும் ஒட்டுமொத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு போட்டியை தள்ளிவைப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்தோம். ஐ.பி.எல். போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் வரவில்லை. எல்லா நேரங்களிலும் கொரோனா பாதிப்பு குறித்த செய்திகளை தான் அதிகம் பார்க்க முடிகிறது. வீட்டில் இருக்கும் இந்த தருணத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்தால் சிந்தனைகள் மாறுவதுடன் குறைந்தபட்சம் 3-4 மணி நேரம் பொழுதுபோக்காக இருக்கும் என்று தான் மக்கள் கருதினார்கள். ஐ.பி.எல். போட்டியால் கொரோனா அதிகம் பரவியது என்று சொல்ல முடியாது.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை (பயோ பபுள்) மீறி கொரோனா தொற்று வீரர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு இதேமாதிரி கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி தான் ஐ.பி.எல். போட்டி சுமூகமாக நடைபெற்றது. அங்கு நாங்கள் போட்டிக்கு சாலை வழியாக பயணித்தோம். ஆனால் இங்கு விமானம் மூலம் சென்றோம். தற்போது கொரோனா காற்றின் மூலம் அதிகம் பரவுவதாக சொல்லப்படுகிறது. வருண் சக்ரவர்த்தி காயத்தின் தன்மை குறித்து அறிய ‘ஸ்கேன்’ எடுக்க சென்றது உண்மை தான். ஆனால் அவருக்கு எங்கிருந்து கொரோனா தொற்றியது என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரணை செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் உடனடியாக வீடு திரும்ப முடியாது. அவர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் கவனித்து விதிமுறைகளின்படி திருப்பி அனுப்பும். எல்லா வீரர்களும் வீடு திரும்புவதற்கு தேவையான உதவிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து கொடுக்கும்.

போட்டி மீண்டும் நடைபெறுவது எப்போது?

எந்த ஆட்டத்தில் இருந்து போட்டி தள்ளிவைக்கப்பட்டதோ? அதில் இருந்து தொடங்கி எஞ்சிய 31 ஆட்டங்களும் நடத்தி முடிக்கப்படும். அதனை நடத்துவது எப்பொழுது சாத்தியமாகும் என்பது குறித்து யோசித்து வருகிறோம். அதற்கு வருங்கால சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையையும் பார்க்க வேண்டும். இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ ஐ.பி.எல். போட்டியை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பிரிஜேஷ் பட்டேல் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்கு
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
3. வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 4 தோல்வியுடன் இதுவரை 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது.