ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்றனர்


ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்றனர்
x
தினத்தந்தி 7 May 2021 2:09 AM GMT (Updated: 7 May 2021 2:09 AM GMT)

கொரோனா பாதிப்பால் ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த போட்டியில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி அதிகாரிகள், வர்ணனையாளர்கள் உள்பட பிற ஊழியர்கள் தங்கள் வீட்டுக்கு திரும்பி வருகிறார்கள்.

இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் வருகிற 15-ந் தேதி வரை இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கு ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி இந்தியாவில் இருந்து வரும் ஆஸ்திரேலியர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 பேர் தங்கள் நாட்டுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளிட்ட 40 பேரும் நேற்று மாலத்தீவுக்கு தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அரசின் அனுமதி கிடைத்ததும் மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் அவர்கள் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு செல்வார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா) சிகிச்சை முடிந்து கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகு தான் நாடு திரும்ப முடியும். இதற்கிடையே கொரோனா பாதிப்புக்கு ஆளான சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி ஆகியோர் டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு இங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கபட்ட 2 நாட்களுக்குள் ஆஸ்திரேலிய வீரர்களை பத்திரமாக மாலத்தீவுக்கு அனுப்பி வைத்ததற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மைக் ஹஸ்சி நாடு திரும்புவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயலாற்றுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story