பாதுகாப்பான சூழல் இல்லாவிட்டால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்தக்கூடாது; கம்மின்ஸ் பேட்டி


பாதுகாப்பான சூழல் இல்லாவிட்டால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்தக்கூடாது; கம்மின்ஸ் பேட்டி
x
தினத்தந்தி 8 May 2021 3:01 AM GMT (Updated: 8 May 2021 3:01 AM GMT)

கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த சமயத்தில் கொரோனா 3-வது அலை தாக்கக்ககூடும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுபவருமான பேட் கம்மின்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்றால், இங்கு நடத்தாமல் இருப்பதே நல்லது. அது தொடர்பான கேள்விக்கு தான் முதலில் பதில் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் அது குறித்து இப்போதே பேசுவது நன்றாக இருக்காது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து மக்களுக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனால் லட்சக்கணக்கான மக்கள் இந்த போட்டியை இந்தியாவில் நடத்தியிருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே நீங்கள் என்ன செய்ய முடியும்? இரு தரப்பினரையும் பார்க்கவேண்டி உள்ளது. இந்த தொடரை பொறுத்தவரை பலதரப்பு ஆலோசனைகளை கேட்டு சரியான முடிவை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.


Next Story