ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 268 ரன்கள் சேர்ப்பு


ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 268 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 8 May 2021 3:41 AM GMT (Updated: 8 May 2021 3:41 AM GMT)

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது.

பாகிஸ்தான் அணியில் 36 வயதான வேகப்பந்து வீச்சாளர் தபிஷ்கான் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் 137 முதல்தர போட்டியில் விளையாடி 598 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கடந்த 66 ஆண்டுகளில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த அதிக வயது வீரர் இவர் தான்.

‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் ‘பேட்’ செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் 2 ரன்னில் அவுட் ஆனார். இதன் பின்னர் அசார் அலி, அபித் அலி ஜோடி சேர்ந்து ஸ்கோரை வலுவாக உயர்த்தினர். தனது 18-வது சதத்தை நிறைவு செய்த அசார் அலி 126 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், பவாத் ஆலம் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. 3-வது சதத்தை அடித்த அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story