டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டம்


டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 9 May 2021 12:49 AM GMT (Updated: 9 May 2021 12:49 AM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை மொத்தம் 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி அங்கு இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது. இவ்விரு போட்டிகளுக்கான விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 4 மாற்று வீரர்களும் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் போட்டி நடைபெற இருப்பதால் வீரர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக வருகிற 25-ந்தேதி முதல் இந்திய வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் (பயோ-பபுள்) இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் அவர்கள் 8 நாட்கள் கடுமையாக தனிமைப்படுத்தப்படுவார்கள். ஓட்டல் அறையிலேயே முடங்கி இருக்க வேண்டியது இருக்கும். தனிமைப்படுத்துதலின் போது 3 நாள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

கொரோனா தடுப்பூசி

அதன் பிறகு ஜூன் 2-ந்தேதி இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள். அங்கு சென்றதும் நமது வீரர்கள் மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏற்கனவே இந்தியாவில் தனிமைப்படுத்துதலில் இருந்து விட்டு தனிவிமானத்தில் பயணித்து உடனடியாக மற்றொரு பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவதால் இந்த முறை பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அடிக்கடி கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்து அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க 1 மாத கால இடைவெளி இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வீரர்கள் வெளியே சுற்ற முடியாது. அதே சமயம் இது நீண்ட தொடர் என்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்லலாம்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே வீரர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் 2-வது டோஸ் போடுவதில் தான் கேள்வி எழுகிறது. ஏனெனில் அந்த சமயத்தில் வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள். எனவே வீரர்களுக்கு 2-வது டோஸ் செலுத்துவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம். ஒரு வேளை இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்காவிட்டால், இந்தியாவில் இருந்து 2-வது டோஸ் பெற்றுக்கொள்வோம்.

6 வேகப்பந்து வீச்சாளர்கள்

இந்த தொடருக்காக இந்திய அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யாரும் காயம் அடையாதவரை எந்த பிரச்சினையும் இல்லை. இதை கவனத்தில் கொண்டு தான் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ள 4 வீரர்களில் 3 பேர் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். அவர்கள் தொடர்ந்து வலை பயிற்சியில் ஈடுபட்டு தயார்நிலையில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பிரதான அணிக்கு அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறினார்.


Next Story