கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா அணி வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, டிம் செய்பெர்ட் கொரோனாவால் பாதிப்பு + "||" + IPL Kolkata team players Prasidh Krishna and Tim Siebert Corona were affected by the match

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா அணி வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, டிம் செய்பெர்ட் கொரோனாவால் பாதிப்பு

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா அணி வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, டிம் செய்பெர்ட் கொரோனாவால் பாதிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, டிம் செய்பெர்ட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். தள்ளிவைப்பு

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி கொரோனா தொற்று வீரர்களை தாக்கியதை அடுத்து கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோர் முதலில் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். அடுத்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி 31 ஆட்டங்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்த போட்டி நிறுத்தப்பட்டது.

இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் பத்திரமாக தங்களது தாயகம் சென்று விட்டனர். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் செல்ல அந்த நாட்டு அரசு வருகிற 15-ந் தேதி வரை தடை விதித்துள்ளது. இதனால் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், போட்டி அதிகாரிகள் உள்ளிட்ட 40 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப முடியாமல் மாலத்தீவுக்கு சென்று தங்கி உள்ளனர். 15-ந் தேதிக்கு பிறகு விமான தடையை ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளதால், அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தங்கள் நாட்டுக்கு செல்வார்கள் என்று தெரிகிறது.

செய்பெர்ட்டுக்கு தொற்று

இதே போல் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர்கள் கடந்த 2 நாட்களாக விமானங்கள் மூலம் தங்கள் நாட்டுக்கு திரும்பினார்கள். நாட்டுக்கு திரும்பும் முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டிம் செய்பெர்ட்டுக்கு (நியூசிலாந்து) நடத்தப்பட்ட பரிசோதனையில் மிதமான கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. கடந்த 10 நாட்களில் 7 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்து இருந்தது.

கடைசியாக நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் அவர் தங்கள் நாட்டு வீரர்களுடன் இணைந்து நாடு திரும்ப முடியவில்லை. இதையடுத்து டிம் செய்பெர்ட் ஆமதாபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அங்கிருந்து அவர் சென்னை அழைத்து வரப்பட்டு இங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு 2 முறை பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்த பிறகு தான் டிம் செய்பெர்ட் நாடு திரும்ப முடியும். அத்துடன் அவர் தனது நாட்டுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு தான் குடும்பத்தினருடன் இணைய முடியும்.

பிரசித் கிருஷ்ணாவுக்கும் பாதிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த 25 வயது இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவும் கொரோனாவில் சிக்கி இருக்கிறார். இதன் மூலம் கொரோனாவால் பாதித்த கொல்கத்தா அணி வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனைகள் எல்லாம் முடித்து கொண்டு பிரசித் கிருஷ்ணா ஆமதாபாத்தில் இருந்து தனது சொந்த ஊரான பெங்களூருக்கு கடந்த 5-ந் தேதி விமானம் மூலம் திரும்பினார். அடுத்த நாளில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சீசனில் 7 ஆட்டத்தில் ஆடி 8 விக்கெட்டுகள் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா கடந்த மார்ச் மாதம் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியின் மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணா நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த போட்டிகளுக்கு முன்பு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஸ்சி குணமடைந்தார்

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா) குணமடைந்துள்ளார். சென்னையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. மேலும் ஒரு பரிசோதனை முடிவுக்கு பிறகு அவர் மாலத்தீவு சென்று அங்குள்ள ஆஸ்திரேலிய குழுவினருடன் இணைந்து நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.