ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்


ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 9 May 2021 11:08 PM GMT (Updated: 9 May 2021 11:08 PM GMT)

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நடந்து வருகிறது.

ஹராரே, 

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 510 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபித் அலி இரட்டை சதம் (215 ரன்) விளாசினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 52 ரன்களுடன் தடுமாறியது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் இன்னிங்சில் 60.4 ஓவர்களில் 132 ரன்களுக்கு சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 13 ஓவர்களில் 4 மெய்டனுடன் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 5-வது நிகழ்வாகும்.

பின்னர் ‘பாேலா-ஆன்’ ெபற்று 378 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே இந்த முறை சுதாரித்து கொண்டு சற்று தாக்குப்பிடித்து விளையாடியது. அதிரடி காட்டிய பொறுப்பு கேப்டன் பிரன்டன் டெய்லர் 49 ரன்களும் (31 பந்து, 10 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 80 ரன்களும் (137 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார்கள். இறுதிகட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே 63 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து தோல்விப்பாதைக்கு தள்ளப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் நமன் அலி 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டும் சாய்த்தனர். ஜிம்பாப்வே கைவசம் இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே இருப்பதால், இந்த டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. 4-வது நாளான இன்றைய ஆட்டம் சிறிது நேரத்தில் முடிவுக்கு வந்து விடும்.

Next Story