உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஓய்வு


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஓய்வு
x
தினத்தந்தி 13 May 2021 12:08 AM GMT (Updated: 2021-05-13T05:38:47+05:30)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெலிங்டன், 

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக நியூசிலாந்து அணி, இங்கிலாந்துடன் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் லண்டனிலும் (ஜூன் 2-6), 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமிலும் (ஜூன் 10-14) நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் 35 வயது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான வாட்லிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாட்லிங் கூறுகையில், ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். இங்கிலாந்து மண்ணில் நடக்கும் போட்டிகள் சில நிலைகளில் சவாலானதாகும். இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு அணியாக எங்களது உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது என்பது எங்களுக்கு தெரியும். இந்த பெரிய தொடரில் வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான நேரமாகும். எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புகிறேன். டெஸ்டில் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க கூடியவன் நான். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும்’ என்றார்.

73 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8 சதம் உள்பட 3,773 ரன்கள் சேர்த்து இருக்கும் வாட்லிங் 2019-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அதிகபட்சமாக 205 ரன்கள் திரட்டினார். விக்கெட் கீப்பராக 249 ‘கேட்ச்' செய்து இருக்கும் அவர் 8 முறை ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். இது தவிர 28 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.


Next Story