இந்திய அணி ஏற்படுத்திய கவனச்சிதறலால் தோல்வியை சந்தித்தோம் புதுமையான காரணத்தை சொல்லும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்


இந்திய அணி ஏற்படுத்திய கவனச்சிதறலால் தோல்வியை சந்தித்தோம் புதுமையான காரணத்தை சொல்லும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்
x
தினத்தந்தி 13 May 2021 10:46 PM GMT (Updated: 13 May 2021 10:46 PM GMT)

நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததற்கு புதுமையான காரணத்தை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இப்போது கூறியுள்ளார்.

சிட்னி, 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர்- ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இத்தனைக்கும் முதலாவது டெஸ்டில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் விராட் கோலி முதலாவது டெஸ்டுடன் தாயகம் திரும்பினார். முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் ரஹானே தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது. குறிப்பாக பிரிஸ்பேனில் 1988-ம் ஆண்டுக்கு பிறகு தோல்வியே சந்திக்காமல் இருந்த ஆஸ்திரேலியாவை, ரிஷாப் பண்டின் அபார பேட்டிங்கால் இந்திய அணி வீழ்த்தி காட்டியது.

இந்த டெஸ்ட் தொடரின் தோல்விக்கு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இப்போது வித்தியாசமான காரணம் ஒன்றை கூறியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது, சவாலான ஒரு விஷயம் என்னவென்றால், ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதுப்படுத்தி தேவையில்லாமல் தொல்லை கொடுத்து கவனத்தை சிதற வைப்பார்கள். இந்த தொடரில் அதில் தான் நாங்கள் வீழ்ந்து விட்டோம். இதற்கு சிறந்த உதாரணம், பிரிஸ்பேனில் முதலில் (கொரோனா கட்டுப்பாடு கெடுபிடி காரணமாக முதலில் இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினர்) விளையாமாட்டோம் என்று சொன்னார்கள். இதனால் கடைசி டெஸ்ட் போட்டி எங்கு நடக்கப்போகிறது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. இது போன்ற தேவையற்ற விவகாரங்களை கிளப்பி குழப்புவதில் இந்திய வீரர்கள் கில்லாடிகள்’ என்றார்.

சுமித்துக்கு ஆதரவு

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வலம் வந்த ஸ்டீவன் சுமித் 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்டின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி கேப்டன் பதவியை இழந்தார். அவருக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படாது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தடை எல்லாம் முடிந்து ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடி வரும் சுமித், வாய்ப்பு கிடைத்தால் கேப்டன் பதவியை ஏற்க தயார் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இது தொடர்பான கேள்விக்கு 36 வயதான டிம் பெய்ன் பதில் அளித்து கூறுகையில், ‘கேப்டன் பதவிக்கு பரிசீலிக்க சுமித் தகுதியானவர் என்று நினைக்கிறேன். அவரது கேப்டன்ஷிப்பின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன். அற்புதமான கேப்டன். வியூகங்களை வகுப்பதிலும் திறம்பட செயல்பட்டார். தென்ஆப்பிரிக்கா சம்பவத்துக்கு பிறகு அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர் மீண்டும் கேப்டன் பதவியை பெறுவதற்கு நான் ஆதரவாக இருப்பேன். நான் குறைந்தது இன்னும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன்’ என்றார்.

ஆண்டின் இறுதியில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அத்துடன் கேப்டன்ஷிப்பில் இருந்து ஒதுங்கி விடுவேன் என்று டிம் பெய்ன் மறைமுகமாக குறிப்பிட்டார்.

Next Story