கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.11 கோடி நிதி திரட்டியது விராட்கோலி தம்பதி


கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.11 கோடி நிதி திரட்டியது விராட்கோலி தம்பதி
x
தினத்தந்தி 15 May 2021 12:32 AM GMT (Updated: 15 May 2021 12:32 AM GMT)

கொரோனா நிவாரண பணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து ரூ.11 கோடி நிதி திரட்டி இருக்கின்றனர்.

புதுடெல்லி, 

கொரோனாவின் இரண்டாவது அலையில் தீவிரமாக சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு, பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ஷிகர் தவான், ஜெய்தேவ் உனட்கட் மட்டுமின்றி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் நிதியுதவி அளித்தனர்.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் அவரது மனைவியும் இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் ‘கெட்டோ’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன் லைன் மூலம் ரூ.7 கோடி நிதி திரட்டி கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளுக்கு அளிக்க முடிவு செய்தனர். இந்த நிதி திரட்டும் முயற்சியில் எல்லோரும் இணைவதுடன் உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்க வேண்டும் என்று இருவரும் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அத்துடன் தங்கள் பங்களிப்பாக ரூ.2 கோடி நன்கொடையாக வழங்கி இந்த முயற்சியை தொடங்கி வைத்தனர்.

கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட விராட்கோலி தம்பதி எடுத்த முயற்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான பலன் கிடைத்து இருக்கிறது. இதுவரை நிவாரண நிதியாக 11 கோடியே 39 லட்சத்து 11,820 ரூபாய் வசூலாகி இருக்கிறது.

இதனை டுவிட்டர் மூலம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கும் விராட்கோலி தனது பதிவில், ‘எங்கள் முயற்சிக்கு கிடைத்த அமோகமான வரவேற்பு குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை எங்கள் இலக்கை நாங்கள் தாண்டி விட்டதாக நினைக்கிறோம். நிதியுதவி அளித்தவர்களுக்கும், இந்த தகவலை பகிர்ந்தவர்கள் உள்பட உதவியாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து இந்த கடினமான சூழலை சமாளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு உதவ இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரியும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ரசிகர்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வாட்ஸ் அப்’ குரூப்பை உருவாக்கி இருக்கிறார். இந்த குரூப்பில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். டுவிட்டர் மூலம் உதவி கேட்டு வரும் கோரிக்கையை தனது ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் பகிர்ந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். கொரோனாவினால் பாதித்தவர்களின் சிகிச்சைக்கு தேவையான ஆஸ்பத்திரி படுக்கை, ஆக்சிஜன், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் இந்த தன்னார்வ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story