தன் மீதான அவதூறு தகவல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிரிக்கெட் வாரியத்திற்கு டபிள்யூ.வி.ராமன் கடிதம்


தன் மீதான அவதூறு தகவல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு  கிரிக்கெட் வாரியத்திற்கு டபிள்யூ.வி.ராமன் கடிதம்
x

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டார்.

முந்தைய 2 ஆண்டுகள் பயிற்சியாளராக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமனும் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ராமன், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பயற்சியாளராக எனது அணுகுமுறை மற்றும் தொழில்நெறிமுறைகள் குறித்து உங்களுக்கு வேறுவிதமாக சொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்ட அந்த கருத்துகள் எனது விண்ணப்பத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா? என்பது தெரியாது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் என்னை குறித்து தேவையற்ற அவதூறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் உங்களுக்கோ அல்லது கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கோ இது தொடர்பாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

பயிற்சியாளராவதற்கு உகந்த திறமையில்லை என்று கூறியிருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் இதை தவிர வேறு காரணங்களால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கும். எனது 20 ஆண்டுகால பயிற்சியாளர் வாழ்க்கையில் நான் எப்போதும் ஒரு கலாசாரத்தை உருவாக்கியுள்ளேன். அதாவது அணியின் நலனே முதலில் முக்கியம். எந்த ஒரு தனிநபரும் விளையாட்டு அல்லது அணியை விட பெரியவர்கள் கிடையாது.

பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்த என்னிடம் சில திட்டங்கள் உள்ளன. நீங்கள் ஆர்வமாக இருந்தால் அதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story