ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பினர்


ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பினர்
x
தினத்தந்தி 17 May 2021 8:29 PM GMT (Updated: 17 May 2021 8:29 PM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக கடந்த 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

சிட்னி, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 4 அணிகளை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக கடந்த 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இங்கிருந்து பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு கடந்த சனிக்கிழமை (மே 15-ந் தேதி) வரை தடைவிதித்து இருந்தது. இதனால் வீரர்கள் பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், பயிற்சியாளர்கள் ரிக்கி பாண்டிங், சைமன் கேடிச் மற்றும் வர்ணனையாளர்கள், போட்டி அதிகாரிகள் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த 38 பேர் உடனடியாக நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியர்கள் அனைவரும் மாலத்தீவு வழியாக நாடு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அவர்கள் விமானம் மூலம் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள ஓட்டலில் அவர்கள் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் ஐ.பி.எல்.ல் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட 38 பேரும் தனி விமானம் மூலம் நேற்று தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள். சிட்னியை சென்று அடைந்த அவர்கள் பஸ் மூலம் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டலில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு தான் வீடு திரும்ப முடியும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.

Next Story