இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவது கடினம் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி பேட்டி


இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவது கடினம் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி பேட்டி
x
தினத்தந்தி 20 May 2021 8:43 PM GMT (Updated: 20 May 2021 8:43 PM GMT)

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த சூழலில் அங்கு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவது கடினம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி, சமீபத்தில் தள்ளிைவக்கப்பட்ட ஐ.பி.எல். தொடரின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் சிகிச்சை பெற்ற அவர் தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தாயகம் சென்றார். சிட்னியில் உள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்ததும் வீட்டுக்கு திரும்புவார்.

இந்த நிலையில் அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. என்னை பொறுத்தவரை தற்போதைய சூழலில் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவது என்பது மிகவும் கடினம்.

ஐ.பி.எல்.-ல் பங்கேற்ற 8 அணிகள் குறித்து நாம் பேசுகிறோம். இதில் கடைபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறி அணிக்குள் கொரோனா பரவிவிட்டது. ஆனால் உலக கோப்பை போட்டியில் இதை விட அதிக அணிகள் வெளிநாட்டில் இருந்து (மொத்தம் 16 அணிகள்) வர உள்ளன. அது மட்டுமின்றி பல மைதானங்களில் விளையாட வேண்டி உள்ளது. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி வெவ்வேறு நகரங்களில் விளையாடினால், வீரர்களை கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது. நிச்சயம் அது ‘ரிஸ்க்’ தான்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது வேறு நாட்டில் நடத்துவது குறித்து ஒரு பக்கம் ஆலோசனை நடந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை இந்தியாவில் நடத்துவதற்குரிய திட்டமிடலை பெரிய அளவில் முயற்சிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் உலகில் உள்ள பெரும்பாலான நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு, இந்த போட்டிக்காக இந்தியாவுக்கு பயணிப்பதில் நிச்சயம் கவலையும், அச்சமும் இருக்கும்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியின் போது எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. இது கொரோனா பாதிப்பு தான் என்று நினைத்துக் கொண்டேன். மேலும் சென்னை அணிக்குரிய பஸ்சில் பந்து வீச்சு பயிற்சியாளருக்கு (எல்.பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு) அடுத்து உட்கார்ந்து சில முறை பயணித்து உள்ளேன். அதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு என்றால், நமக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தேன். அதன்படியே பரிசோதனையில் உறுதி ஆனது. ஐ.பி.எல்.-ல் எங்களது முதற்கட்ட ஆட்டங்களை மும்பையில் பாதுகாப்பான முறையில் விளையாடினோம். இங்கிருந்து பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி டெல்லிக்கு சென்றது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது’ என்றார்.

Next Story