இலங்கை-வங்காளதேசம் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் - இன்று நடக்கிறது


இலங்கை-வங்காளதேசம் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் - இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 22 May 2021 8:40 PM GMT (Updated: 22 May 2021 8:40 PM GMT)

இலங்கை-வங்காளதேசம் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

டாக்கா, 

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி வங்காளதேசம்-இலங்கை மோதும் முதலாவது போட்டி டாக்காவில் இன்று (பகல் 12.30 மணி) நடக்கிறது.

தமிம் இக்பால் தலைமையிலான வங்காளதேச அணியில் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, லிட்டான் தாஸ் என்று முன்னணி வீரர்கள் அனைவரும் திரும்பி வலுவாக உள்ளனர். உள்ளூரில் ஆடுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாகும். அதனால் வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் காத்திருக்கிறார்கள்.

இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் கேப்டன் கருணாரத்னே, சன்டிமால், மேத்யூஸ் ஆகியோர் நீக்கப்பட்டு புதிய கேப்டன் குசல் பெரேரா தலைமையில் களம் இறங்குகிறது. பெரேரா, குசல் மென்டிஸ், குணதிலகா, தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது. இளம் வீரர்களை கொண்ட இலங்கை, வங்காளதேச அணியின் சவாலை சமாளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 48 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 39-ல் இலங்கையும், 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

Next Story