ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது ெகாரோனா பாதிப்பு எப்படி, யார் மூலம் வந்தது என்பதே தெரியவில்லை - அனுபவங்களை பகிரும் எல்.பாலாஜி, வருண்


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது ெகாரோனா பாதிப்பு எப்படி, யார் மூலம் வந்தது என்பதே தெரியவில்லை - அனுபவங்களை பகிரும் எல்.பாலாஜி, வருண்
x
தினத்தந்தி 22 May 2021 11:06 PM GMT (Updated: 22 May 2021 11:06 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி, யார் மூலம் வந்தது என்பதே தெரியவில்லை என்று எல்.பாலாஜி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

சென்னை,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் போது 4 அணிகளில் கொரோனா வைரஸ் ஊடுருவியதால் அந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது கொரோனாவினால் பாதித்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி (சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளர்) ஆகியோரும் அடங்குவர். இவர்கள் கொரோனா அனுபவங்களை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளனர். 29 வயதான வருண் சக்ரவர்த்தி கூறியதாவது:-

இப்போது நான் நன்றாக இருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் பயிற்சியை தொடங்க இயலவில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டாலும் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் சரியாகவில்லை. காய்ச்சலோ, இருமலோ இல்லை. ஆனால் இன்னும் பலவீனமாக இருப்பதாக உணர்கிறேன். தலைசுற்றலும் இருக்கிறது. வாசனையை இழந்திருந்தேன். நாக்கில் சுவை கூட அவ்வப்போது இல்லாமல் போய் விடுகிறது. ஆனாலும் விைரவில் பழைய நிலைக்கு திரும்பி பயிற்சியை தொடங்குவேன் என்று நம்புகிறேன்.

நான் கற்றுக்ெகாண்டதில் இருந்து, கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தாலும் கூட அதன் பிறகு உடல் முழுமையாக தேறுவதற்கு 2 வார காலம் ஆகும் என்பதை மற்ற வீரர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது மட்டுமின்றி ‘நெகட்டிவ்’ வந்தாலும் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும்.

கடந்த 1-ந்தேதி எனக்கு ெகாேரானா அறிகுறிகள் தென்பட்டன. உடல் சோர்வாக இருந்தது. இருமல் இல்லை. ஆனால் லேசான காய்ச்சல் இருந்தது. இது குறித்து அணி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தினேன். அவர்கள் உடனடியாக எனக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு அணியின் மற்ற வீரர்களிடம் இருந்து என்னை தனிமைப்படுத்தினர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும், முதலில் கொஞ்சம் கவலைப்பட்டேன். நான் மட்டுமல்ல, தேசத்தில் எத்தனையோ பேர் இந்த பாதிப்பில் இருப்பதை நினைத்து தேற்றிக்கொண்டேன். எனது குடும்பத்தில் கூட சிலர் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள்.

தனிமைப்படுத்துதலால் 12 நாட்கள் ஒரே அறையில் முடங்கினேன். தினசரி ஏறக்குறைய ஒரே மாதிரி உணவு தான். ஆனால் காலையில் 9 மணிக்கு தான் விழிப்பேன். கொஞ்சம் சாப்பிடுவேன். மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வேன். இணையதளத்தின் மூலம் சினிமா பார்ப்பது, குடும்பத்தினருடன் பேசுவது, நண்பர்களுடன் வீடியோ உரையாடல், புத்தகம் படிப்பது என்று பொழுதை போக்கினேன். நல்லவேளையாக அவர்கள் அச்சமின்றி நிலைமையை நன்றாக கையாண்டனர்.

இந்த நேரத்தில் கொல்கத்தா அணி நிர்வாகம் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. என்னை கவனித்துக் கொள்ள தனியாக ஒருவரை நியமித்து இருந்தனர். கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசி ஊக்கப்படுத்தினார்.

ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்ட போதிலும் இரண்டு ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டேன். பாதிப்பில் இருந்து மீள எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கடன்பட்டு உள்ளேன்.

இவ்வாறு வருண் சக்ரவர்த்தி கூறினார்.

சென்னையில் வசிக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் 39 வயதான எல்.பாலாஜி கூறியதாவது:-

கடந்த 2-ந் தேதி மூச்சு விடுதில் கொஞ்சம் சிரமம் இருப்பதாக உணர்ந்தேன். உடல்வலி, லேசான மூக்கடைப்பும் இருந்தது. உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மறுநாள் காலையில் தொற்று இருப்பதாக முடிவு வந்தது. இதனால் நான் அதிர்ச்சிக்குள்ளானேன். அணியின் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்தை நான் மீறியதில்லை. அப்படி இருந்ததும் இது எப்படி வந்தது என்று குழம்பினேன்.

மும்பையில் ஆட்டங்களை முடித்துக் கொண்டு ஏப்ரல் 26-ந்தேதி டெல்லிக்கு சென்றோம். அங்கு அடுத்தடுத்த நாட்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. மே 1-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடினோம். நம்மிடம் உள்ள வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, கொரோனாவை தடுத்து நிறுத்தும் என்று உறுதியாக நம்பினேன். ேம 2-ந்தேதி நடத்தப்பட்ட ேசாதனையில் என்னுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், அணியின் உதவியாளர் ஆகியோருக்கும் ‘பாசிட்டிவ்’ வந்தது. நிச்சயம் முடிவு தவறானது என்று கூறி மீண்டும் சோதித்தோம். ஆனால் எனக்கு 2-வது தடவையும் கொரோனா இருப்பதற்கான ‘பாசிட்டிவ்’ முடிவே வந்தது. இதன் பின்னர் என்னை ஓட்டலில் மற்றொரு தளத்துக்கு மாற்றி தனிமைப்படுத்தினர்.

ஆரம்பத்தில் எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவித்தேன். அடுத்த 24 மணி நேரத்தில் குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து அடுக்கடுக்கான மெசேஜ்களால் விஷயம் பெரிதானது. இதன் பிறகு தான் கவலைக்குள்ளானேன். தனிமைப்படுத்தலில் என்னை நானே பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. அது மட்டுமின்றி என் மூலம் எனக்கு அருகில் இருந்த சக வீரர்கள் ராபின் உத்தப்பா, புஜாரா, தீபக் சாஹர் ஆகியோருக்கும் கொரோனா வந்திருக்குமோ என்று பயந்தேன். அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பாதிப்பு இல்லை.

அதன் பிறகு பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை அறிந்து கொண்டேன். ஆனால் இந்த நாள் வரை எங்களுக்கு எப்படி, யார் மூலம் கொரோனா வந்தது என்பது தெரியவில்லை. சென்னை அணியின் பயிற்சி முகாம் தொடங்கியதில் இருந்தே கடுமையாக பின்பற்றப்பட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தோம். டெல்லிக்கு சென்ற பிறகும் இதே பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றினோம். அப்படி இருந்தும் எப்படி கொரோனா நுழைந்தது என்பதை உணர முடியவில்லை.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய சவால்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமான போராட்டமாக இருந்தது. மனதளவிலும், உடல் அளவிலும் கொரோனாவில் இருந்து மீள்வது என்பது காடுகளிலும், மலைகளிலும் தனிமனிதன் சாகசம் செய்யும் ‘மேன்-வைல்டு’ தொடர் போன்ற அனுபவமாக இருந்தது.

இவ்வாறு பாலாஜி கூறினார்.

Next Story