டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் நிலவினால் இந்தியா தடுமாறும் - இங்கிலாந்து முன்னாள் வீரர் பனேசர் சொல்கிறார்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் நிலவினால் இந்தியா தடுமாறும் - இங்கிலாந்து முன்னாள் வீரர் பனேசர் சொல்கிறார்
x
தினத்தந்தி 23 May 2021 7:34 PM GMT (Updated: 2021-05-24T01:04:29+05:30)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் நிலவினால் இந்தியா தடுமாறும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் பனேசர் சொல்கிறார்.

புதுடெல்லி, 

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா பங்கேற்கிறது. இவ்விரு போட்டிகளில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது இங்கிலாந்தில் நிறைய இடங்களில் கணிசமாக மழை பெய்கிறது. இதே போன்ற குளிர்ச்சியான சீதோஷ்ண தொடர்ந்து நீடித்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடையே நீயா-நானா? என்ற மோதலை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். வேகப்பந்து திரும்பும் ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை விட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்.

எனவே டெஸ்ட் போட்டியின் போது சில தருணங்களில் பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகி வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் போது, இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதை பார்க்க சூப்பராக இருக்கும். அதே சமயம் நன்கு வெயில் அடித்து ஆடுகளம் காய்ந்து இருந்தால் அத்தகைய சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். பொதுவாக இந்தியா 2 சுழற்பந்து வீச்சாளர், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். எனவே வானம் மேகமூட்டம் இன்றி தெளிவாக காணப்பட்டால், அது இந்தியாவுக்கு அனுகூலமாக மாறி விடும். எல்லாமே சீதோஷ்ண நிலையை சார்ந்தே இருக்கிறது.

இதற்கு முன்பாக நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி அசத்தினால், அதே உத்வேகத்துடன் நல்ல நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை சந்திக்கும். ஆனால் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தினால், அதன் பிறகு அவர்களின் நம்பிக்கை குறைந்து விடும். அவ்வாறு நடப்பது இந்தியாவுக்கு நல்லதாகும்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது. அந்த சமயத்தில் வெயில் கொளுத்தும். ஆடுகளங்கள் வறண்டு போய் இருக்கும். அதனால் இந்த முறை டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என்பதே எனது கணிப்பாகும்.

இவ்வாறு பனேசர் கூறினார்.

Next Story