முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியை வீழ்த்தியது வங்காளதேசம்


முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியை வீழ்த்தியது வங்காளதேசம்
x
தினத்தந்தி 23 May 2021 8:13 PM GMT (Updated: 23 May 2021 8:13 PM GMT)

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியை வங்காளதேசம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாக்கா, 

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. மெதுவான தன்மை கொண்ட மந்தமான இந்த ஆடுகளத்தில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் சேர்த்தது. கேப்டன் தமிம் இக்பால் (52 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (84 ரன், 87 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மக்முதுல்லா (54 ரன்) ஆகியோர் அரைசதம் விளாசினர். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக 8-வது வரிசையில் ஆடிய ஹசரங்கா 74 ரன்களும் (60 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), புதிய கேப்டன் குசல் பெரேரா 30 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் வங்காளதேசம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை அணியைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் கிளம்பியது. பிறகு மறுபடியும் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு முடிவு தவறானது என்பது தெரியவந்தது. மற்றொருவருக்கு மட்டும் கொரோனா இருப்பதற்கான ‘பாசிட்டிவ்’ முடிவு 2-வது முறையாக வந்தது. ஆனாலும் அவர் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் நல்ல நிலையில் இருப்பதால் இது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் போட்டி தடங்கலின்றி நடந்து முடிந்திருக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story