இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளித்தது: ஜெய்தேவ் உனட்கட்


இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளித்தது: ஜெய்தேவ் உனட்கட்
x
தினத்தந்தி 24 May 2021 9:24 PM GMT (Updated: 24 May 2021 9:24 PM GMT)

2010-ம் ஆண்டு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் அதன் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

7 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் அவர் 2018-ம் ஆண்டுக்கு பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. 2019-20-ம் ஆண்டுக்கான ரஞ்சி போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய (10 ஆட்டங்களில் 67 விக்கெட்டுகள்) ஜெய்தேவ் உனட்கட் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய தொடர் மற்றும் சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடர் அடுத்து ஆகஸ்டு 4-ந் தேதி தொடங்க இருக்கும் 5 ஆட்டங்கள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி வலுவானதாக இருந்தது. எனவே அதில் இடம் கிடைக்காதது குறித்து நான் கவலைப்படவில்லை. அந்த தொடரில் முன்னணி பவுலர்கள் சிலர் காயத்தால் விலகிய போது எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது ஏமாற்றம் அளித்தது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், அடுத்து நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் அணிக்கு மீண்டும் அழைக்கப்படாதது ஏமாற்றம் அளித்தது. இருப்பினும் எனது வாய்ப்புக்காக காத்து இருப்பேன். நம்பிக்கை இழக்காமல் எனக்கு நானே ஊக்கம் அளித்து மேலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்’ என்றார்.


Next Story