வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது


வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 24 May 2021 9:36 PM GMT (Updated: 24 May 2021 9:36 PM GMT)

குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் பகல்-இரவு ஆட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது. கேப்டன் தமிம் இக்பால் (52 ரன்கள்), முஷ்பிகுர் ரஹிம் (84 ரன்கள்), மக்முதுல்லா (54 ரன்கள்) அரைசதம் அடித்தனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டும், முகமது சைபுதீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இலங்கை அணியின் பேட்டிங்கில் ஹசரங்கா (74 ரன்கள்) தவிர வேறுயாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான தனஞ்செயா டி சில்வா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மற்ற வீரர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றுவதுடன் உலக கோப்பை சூப்பர் லீக் புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற முடியும் என்பதால் வங்காளதேச அணி வாகை சூட தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் தொடரை இழக்க வேண்டியது இருக்கும் என்பதால் முந்தைய ஆட்ட தவறுகளை களைந்து சரிவில் இருந்து மீண்டு வர இலங்கை அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story